Published : 18 Apr 2017 12:49 PM
Last Updated : 18 Apr 2017 12:49 PM

உமேஷ் யாதவ்வை விளாசிய இளம் ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன்

டெல்லியில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் டி20 போட்டியில் சமீபமாக அபாரமாக வீசி வரும் உமேஷ் யாதவ் பந்து வீச்சை முன்னதாக சஞ்சு சாம்சனும் கடைசியில் ரிஷப் பந்த்தும் வெளுத்து வாங்கியது ஆச்சரியமளிப்பதாக அமைந்தது.

மணீஷ் பாண்டே, யூசுப் பத்தான் இணைந்து 12 ஓவர்களில் 110 ரன்களை விளாசி 21/3 என்ற நிலையிலிருந்து கொல்கத்தாவை அபார வெற்றிக்கு இட்டுச் சென்றனர் என்றாலும் தொடக்கத்திலும், கடைசியிலும் உமேஷ் யாதவ்வின் குறை சொல்ல முடியாத பந்துகளை முறையே சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பந்த் அடித்து ஆடியது ஆச்சரியமளிப்பதாக அமைந்தது.

நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அற்புதமாக வீசிய உமேஷ் யாதவ் சமீபகாலங்களில் அதிகம் உதவிபுரியாத பிட்ச்களிலும் மிக அருமையாக வீசிவருகிறார்.

இந்நிலையில் நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் உமேஷ் யாதவ் 3வது ஓவரை வீச பில்லிங்ஸ் முதலில் லெக் திசையில் வந்த பந்தை மிட்விக்கெட்டில் அருமையான டைமிங்கில் பவுண்டரி அடிக்க, தொடர்ந்து சிங்கிள் எடுத்து சஞ்சுவுக்கு ஸ்ட்ரைக் கொடுத்தார்.

உமேஷ் யாதவ் ஒரு டெஸ்ட் மேட்ச் லெந்த் பந்தை வீச, அதாவது ஆஃப் ஸ்டம்ப் லைனில் ஒரு டீசண்டனான பந்து அது ஆனால் சஞ்சு சாம்சன் அதனை கிட்டத்தட்ட கோலியின் ராஜகவர்டிரைவுடன் ஒப்பு நோக்கும் விதமாக கவர் திசையில் பவுண்டரி அடித்து அசத்தினார்.

ஒரு பவுண்டரி அடித்தாகி விட்டது, அடுத்து கோபமடைந்த ஒரு வேகப்பந்து வீச்சாளர் என்ன வீசுவார் என்பதையும் சஞ்சு கணித்தார். எதிர்பார்த்தது போலவே ஷார்ட் பிட்ச் பந்தை உமேஷ் வீச தேர்ட்மேனில் பவுண்டரி பறந்தது. பிறகு கடைசி பந்து வேகம் குறைவான பந்து, அதனை எக்ஸ்ட்ரா கவரில் பவுண்டரி விளாசினார் சஞ்சு. அருமையான பேட்டிங்கை, டெஸ்ட் போட்டி பேட்டிங்கை டி20-யில் வெளிப்படுத்தினார். ஆனால் ஆட்டத்தின் 8-வது ஓவரில் சஞ்சு சாம்சனை உமேஷ் யாதவ் வீழ்த்தினார். எட்ஜ் செய்து 39 பந்துகளில் வெளியேறினார் சஞ்சு. இருவரிடையே நடந்த இந்த போட்டி ஆட்டம் பார்க்க விறுவிறுப்பாக அமைந்தது.

அதே போல் உமேஷ் யாதவ்வுக்கு மோசமான பந்து வீச்சு தினத்தை அளித்த மற்றொரு டெல்லி வீரர் இளம் இடது கை வீரரான ரிஷப் பந்து ஆவார்.

17-வது ஓவரை உமேஷ் வீச வந்தார். 2-வது பந்து ஆஃப் ஸ்டம்பிலிருந்து எடுத்து லாங் ஆனில் விளாசினார் பந்து சிக்ஸருக்குச் சென்றது. அடுத்த பந்து ஷார்ட் மற்றும் வைடு பந்த் இதனை பாயிண்ட் திசையில் பவுண்டரி அடித்தார். அடுத்த பந்து உண்மையில் ஜெயசூரியா, கில்கிறிஸ்ட் போன்றவர்கள் மட்டுமே ஆடக்கூடிய ஷாட் ஆகும், லெக் ஸ்டம்பில் ஃபுல் பந்தை ஸ்கொயர்லெக்கில் சிக்ஸுக்குத் தூக்கினார் ரிஷப், உமேஷ் அசந்து போனார். மீண்டும் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே புல் லெந்தில் ஒரு பந்தை வீச மீண்டும் லாங் ஆனில் சக்தி வாய்ந்த சிக்ஸ். கடைசி பந்து 140 கிமீ வேகப்பந்து கவர் திசையில் காணாமல் போனது. அந்த ஓவரில் மொத்தம் 26 ரன்களை உமேஷ் யாதவ்வை வெளுத்து வாங்கினார் ரிஷப் பந்த். பந்த் 16 பந்துகளில் 2 பவுண்டரிகள் 4 சிக்சர்களை விளாசி 38 ரன்கள் எடுத்தார். 16 ஓவர்களில் 119/4 என்று திணறிக்கொண்டிருந்த டெல்லி அணியை பந்த் தனது அதிரடி ஆட்டம் மூலம் 17-வது ஓவர் முடிவில் 145/4 என்று கொண்டு வந்தார். ஆனால் அதன் பிறகும் 168 ரன்களையே எடுத்து டெல்லி அணி கொல்கத்தாவிடம் வீழ்ந்தது.

இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரை முதலில் சஞ்சு, பிறகு ரிஷப் பந்த் ஆகிய இளம் வீரர்கள் அடித்து ஆடியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x