Last Updated : 29 Jul, 2016 09:04 AM

 

Published : 29 Jul 2016 09:04 AM
Last Updated : 29 Jul 2016 09:04 AM

ரியோவில் இந்திய அணி வீரர்கள்

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக கருதப்படும் ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் வரும் 5-ம் தேதி தொடங்குகிறது. 31-வது ஒலிம்பிக் போட்டியான இந்த திருவிழா 21-ம் தேதி நிறைவு பெறுகிறது. ரியோ ஒலிம்பிக்கில் 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்து 500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்தியா சார்பில் 120 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இவர்கள் பகுதி வாரியாக ரியோ சென்றடைகின்றனர். இன்னும் ஒருவார காலமே உள்ள நிலையில் ஒலிம்பிக் திருவிழாவில் கலந்து கொள்ள இந்திய வீரர்களை கொண்ட முதல் குழு ராகேஷ் குப்தா என்பவர் தலைமையில் நேற்று பிரேசிலை சென்றடைந்தது.

இந்த குழுவில் ஜித்து ராய், பிரகாஷ் நஞ்சப்பா, குர்பிரித் சிங், ஷெனாய், மனவ்ஜித் சாந்து, அபூர்வி சண்டிலா, அயோனிகா பால், குஷ்பீர் கவுர், பூனியா, சந்தீப் தோமர், மனிஷ் ராவத், மன்பிரித் கவுர், சிவா தபா, மனோஜ் குமார் உள்ளிட்ட வீரர்களும், பயிற்சியாளர்கள், மருத்துவக்குழுவினரும் இடம் பெற்றி ருந்தனர்.

இதைத்தொடர்ந்து இந்திய வீரர்கள் ஒலிம்பிக் கிராமத்தில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளில் தங்கினர். ஒலிம்பிக் கிராமத்திலேயே அவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. ராகேஷ் குப்தாவுடன் வீரர்கள் உணவு அருந்திக் கொண்டிருந்த போது திடீரென சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாஹ் அங்கு ஆய்வுக்கு வந்திருந்தார்.

அப்போது அவர் ராகேஷ் குப்தாவுடன் சிறிது நேரம் உரையாடினார். இந்திய வீரர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி யுள்ள விதங்களை கேட்டறிந்தார்.

இது தொடர்பாக தாமஸ் பாஹ் கூறும்போது, ‘‘இந்திய அணியிடம் இருந்து இந்த முறை சிறந்த திறன்களை எதிர்பார்க்கிறேன். இந்திய வீரர்கள் முன்கூட்டியே வருகை தந்தது சிறப்பான விஷயம். ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்பட இந்திய வீரர்களை வாழ்த்து கிறேன்’’ என்றார்.

ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள வசதிகள் குறித்து ராகேஷ் குப்தா கூறும்போது, ‘‘சைவ உணவு வகைகள் அதிகம் உள்ளன. அடுத்த சில நாட்களில் மேலும் சில உணவு வகைகளை சேர்ப்பதாக தெரிவித்துள்ளனர். தங்கும் அறைகளும் வசதியாக உள்ளது. சில அறைகளில் கடைசி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதுவும் அடுத்த சில நாட்களில் முடிவடைந்துவிடும்.

இந்திய அணி வீரர்கள் அறை போட்டியை நடத்தும் பிரேசில் வீரர்கள் தங்கியுள்ள அறைக்கு அடுத்தப்படியாக உள்ளது. அறையில் இருந்து பார்க்கும் போது மலைப்பகுதிகள் வியக்கும் வகையில் உள்ளது.

மேலும் பொதுவான வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. எங்கள் கட்டிடத்துக்கு அடுத்து தான் நீச்சல் குளம் உள்ளது. ஒலிம்பிக் பிளாஸா, உடற் பயிற்சி கூடங்களிலும் தேவையான வசதிகள் உள்ளன.

பல வீரர்கள் வெளிநாடுகளில் பயிற்சி யில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் சரியான நேரத்துக்கு வந்துவிடுவார்கள். போட்டிக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள அவர்களுக்கு போதுமான அவகாசம் உள்ளது’’ என்றார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x