

ஜமைக்கா டெஸ்ட் போட்டியில் அஜிங்கிய ரஹானே தனது 7-வது டெஸ்ட் சதத்தை எடுத்தார். இந்தியா இந்த மைதானத்தில் முதல் முறையாக 500 ரன்களை எட்டியுள்ளது.
3-ம் நாள் ஆட்ட புள்ளிவிவரங்கள் சில:
மே.இ.தீவுகளில் இந்தியா முதன் முதலாக 2-வதாக பேட் செய்து 300 ரன்களுக்கும் மேல் முன்னிலை பெற்றுள்ளது. மொத்தமாக 2-வதாக பேட் செய்ததில் 200 ரன்களுக்கும் மேல் முன்னிலை பெற்றது இது 3-வது முறையாகும்.
தொடர்ச்சியாக 2வது முறை 300 ரன்களுக்கும் மேல் முன்னிலை பெற்றுள்ளது, முதல் டெஸ்ட் போட்டியில் 323 ரன்கள் முன்னிலை பெற்றது, தற்போது 304 ரன்கள் முன்னிலை பெற்றது.
மே.இ.தீவுகளில் அந்த அணிக்கு எதிராக 5-வது முறையாக 500 ரன்களை இந்திய அணி எடுத்துள்ளது.
மொத்தமாக வெளிநாடுகளில் 500 மற்றும் அதற்கு மேலான ஸ்கோர்களை அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் எடுப்பது இது 3-வது முறையாகும்.
நம்பர் 5 பேட்ஸ்மெனாக கிங்ஸ்டன் ஜமைக்காவில் அஜிங்கிய ரஹானே எடுத்த 108 ரன்கள் மே.இ.தீவுகளுக்கு எதிராக பாலி உம்ரிகர் இதே டவுனில் எடுத்த 117 ரன்களுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. இதே டவுனில் பாலி உம்ரிகர் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் 1953-ம் ஆண்டு 130 ரன்களை எடுத்துள்ளார், ஏப்ரல் 2002-ல் ராகுல் திராவிட் இதே டவுனில் இறங்கி 144 நாட் அவுட்டாக இருந்துள்ளார்.
நம்பர் 5-இல் களமிறங்கி துணைக்கண்டத்திற்கு வெளியே 3 சதங்களை எடுத்த பாலி உம்ரிகர், அசாருதீன், சச்சின் டெண்டுல்கர், கங்குலி ஆகியோருக்கு அடுத்த இடத்திற்கு ரஹானே தற்போது இந்தச் சதத்தின் மூலம் வந்துள்ளார்.
1976-ம் ஆண்டு டேவிட் ஹால்ஃபோர்ட் என்ற ஸ்பின்னர் 23 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இந்தியாவுக்கு எதிராக கைப்பற்றிய பிறகு தற்போது ராஸ்டன் சேஸ் இந்தியாவுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஸ்பின்னரானார்.