

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் பிரிவில் ஸ்பெயின் ரபேல் நடால், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, குரோஷியாவின் இவான் டுடிக் ஜோடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மகளிர் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் பெத்தானி மேடக், செக் குடியரசின் லூசி சபரோவா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் 9-ம் நிலை வீரரான ஸ்பெயின் ரபேல் நடால், 15-ம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகர் டிமிட்ரோவை எதிர்த்து விளையாடினார்.
இதில் முதல் செட்டை நடால் 6-3 என்ற கணக்கிலும் அடுத்த செட்டை டிமிட்ரோவ் 5-7 என்ற கணக்கிலும் கைப்பற்றினார். 3-வது செட்டில் கடும் போராட்டம் நிலவியது. 6-6 என சமநிலை வகித்த நிலையில் டைபிரேக்கரில் நடால் இந்த செட்டை 7(7)-6(5) தனதாக்கினார். இதற்கு 4-வது செட்டில் டிமிட்ரோவ் பதிலடிகொடுத்தார். இந்த செட்டை அவர் 7(7)-6(4) என கைப்பற்ற வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட் பரபரப்பானது.
இதில் நடால் 6-4 என வென்றார். முடிவில் சுமார் 4 மணி நேரம் 56 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நடால் 6-3, 5-7, 7(7)-6(5), 7(7)-6(4), 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரருடன் பலப்பரீட்சை நடத்துகிறார் நடால்.
நடால் 14 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களும், பெடரர் 17 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களும் வென்றுள்ளனர். நடால் கடைசியாக 2009-ல் ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்றிருந்தார். அவர் வென்ற ஒரே ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் இதுதான். மாறாக பெடரர் 4 முறை ஆஸ்திரேலிய ஓபனில் மகுடம் சூடி உள்ளார்.
இருவரும் கிராண்ட் ஸ்லாம் இறுதிப்போட்டிகளில் 8 முறை நேருக்கு நேர் மோதி உள்ளனர். இதில் நடால் 6 முறையும், பெடரர் இரண்டு முறையும் பட்டம் வென்றுள்ளனர். இருவரும் கடைசியாக மோதிய 4 ஆட்டங்களிலும் நடாலே வெற்றி வாகை சூடியுள்ளார்.
மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியின் அமெரிக்காவின் பெத்தானி மேடக், செக் குடியரசின் லூசி சபரோவா ஜோடி 6-7, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் செக் குடியரசின் அன்ட்ரியா ஹெலகோவா, சீனாவின் பெங்க் ஷாய் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
கலப்பு இரட்டையர் அரை இறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா, குரோஷியாவின் இவான் டுடிக் ஜோடி 6-4, 2-6, 10-5 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர், ஷேம் குரோத் ஜோடியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.