

அஜர்பைஜானின் பகு நகரில் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிக் கான தகுதி சுற்று போட்டி யில் இந்தியாவின் சுமித் சங்வான் காலிறுதியில் தோல்வியடைந்த தால் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார்.
81 கிலோ எடை பிரிவில் அவர், ரஷ்யாவின் பீட்டர் ஹமுகோவிடம் தோல்வியை சந்தித்தார். எனினும் ஹமுகோ இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றால், அதிர்ஷ்ட தோல்வியாளர் என்ற பிரிவில் சுமித் சங்வான் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறலாம் என்ற நிலை இருந்தது.
ஆனால் நேற்று நடைபெற்ற அரையிறுதியில் ஹமுகோ தோல்வியடைந்தால், சுமித் சங்வானின் ஒலிம்பிக் கனவு தகர்ந்தது.
இந்த தொடரில் 75 கிலோ பிரிவில் விகாஸ் கிருஷ்ணன், 64 கிலோ பிரிவில் மனோஜ் குமார் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்ததால் ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
நேற்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றது. இதில் விகாஸ் கிருஷ்ணன் துர்க்மெனிஸ்தானின் அச்சிலோவ் அர்ஸ்லான்பெக்கை எதிர்கொள்வதாக இருந்தார்.
ஆனால் காலிறுதி ஆட்டத்தின் போது நெற்றியில் ஏற்பட்ட காயத்துக்கு தையல் போட்டிருந்ததால் உடல் தகுதி காரணமாக போட்டியில் இருந்து விகாஸ் விலகினார். இதனால் அவர் வெண்கல பதக்கம் பெற்றார். மனோஜ் குமார், இங்கிலாந்தின் பாட் மெக்கார்மெக்கிடம் 0-3 என தோல்வியடைந்து வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார்.