Published : 18 Mar 2014 10:20 AM
Last Updated : 18 Mar 2014 10:20 AM

தேசிய ஹாக்கி: இறுதிச்சுற்றில் நுழையுமா தமிழகம்?

மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் நடைபெற்று வரும் தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் “பி” டிவிசன் போட்டியில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதியில் தமிழகமும், அஸ்ஸாமும் சந்திக்கின்றன.

சி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழக அணி லீக் சுற்றில் தனது முதல் ஆட்டத்தில் ஆந்திரத்துடன் டிரா (0-0) செய்தது. பின்னர் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 5-0 என்ற கோல் கணக்கில் வென்றால் மட்டுமே அரையிறுதியை உறுதி செய்ய முடியும் என்ற கட்டாயத்தில் களமிறங்கிய தமிழக அணி 10-0 என்ற கோல் கணக்கில் திரிபுராவைத் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.

அதேநேரத்தில் அஸ்ஸாம் அணியையும் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. லீக் சுற்றில் தான் விளையாடிய 3 ஆட்டங்களிலும் அந்த அணி வெற்றி கண்டுள்ளது.

அஸ்ஸாம் 16-0 என்ற கோல் கணக்கில் கோவாவையும், 1-0 என்ற கணக்கில் பெங்காலையும், 7-1 என்ற கணக்கில் விதர்பாவையும் தோற்கடித்தது. இதில் பெங்கால் அணியைத் தவிர மற்ற இரு அணிகளுமே பலவீனமான அணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம், அஸ்ஸாம் ஆகிய இரு அணிகளுமே பலம் வாய்ந்தவை என்பதால் அரையிறுதிப் போட்டி கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக தமிழக அணியின் பயிற்சியாளர் போஸிடம் கேட்டபோது அவர் கூறியது:

தமிழகம், அஸ்ஸாம் இரு அணிகளுமே சமபலம் வாய்ந்தவை என்றாலும், அஸ்ஸாமை வீழ்த்த முடியும் என நம்புகிறோம். வழக்கமாக 5 ஸ்டிரைக்கர்களுடன் களமிறங்குவோம். ஆனால் இந்தப் போட்டியில் 4 ஸ்டிரைக்கர்களுடன் மட்டுமே களமிறங்குகிறோம். கூடுதலாக ஒரு நடுகள வீராங்கனையுடனும் களமிறங்க முடிவு செய்துள்ளோம்.

ஏற்கெனவே எங்களின் நடுகளம் பலமாக இருக்கிறது. கூடுதலாக ஒரு நடுகள வீராங்கனையை சேர்க்கும்போது, நடுகள வீராங்கனைகளில் குமுதவல்லி அல்லது கற்பகம் முன்னேறி சென்று தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபடுவார்கள். அப்படி ஆடும்போது கோல் வாய்ப்புகளை உருவாக்க முடியும்.

திரிபுராவுக்கு எதிராக அதுபோன்ற ஆட்டத்தை பரீட் சார்த்த முறையில் செயல்படுத்தி பார்த்தோம். அதில் பலன் கிடைத் தது. அதை இந்த ஆட்டத்தில் முழுமையாக செயல்படுத்தவுள் ளோம் என்றார்.

“பி” டிவிசன் போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாக இந்த முறை இறுதிச்சுற்றுக்கு முன்னேறி, அடுத்த ஆண்டில் “ஏ” டிவிசனில் விளையாடத் தகுதிபெறுவதே எங்களின் இலக்கு என பயிற்சி யாளர் போஸ் கூறியிருந்தார். இப்போது அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் தமிழகம், அஸ்ஸாமை தோற்கடிக் கும்பட்சத்தில் “ஏ” டிவிசனில் விளையாட தகுதிபெற்றுவிடும். தமிழக ஹாக்கி அணிகளில் சீனியர் மகளிர் அணியைத் தவிர எஞ்சிய 3 அணிகளுமே “ஏ” டிவிசனில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x