2-வது ஒருநாள்: கிறிஸ் வோக்ஸ் அபாரம்; 3 விக். இழந்து இந்தியா திணறல்

2-வது ஒருநாள்: கிறிஸ் வோக்ஸ் அபாரம்; 3 விக். இழந்து இந்தியா திணறல்
Updated on
1 min read

கட்டாக்கில் நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று இந்தியாவை பேட் செய்ய அழைத்த இங்கிலாந்து தவண், ராகுல், கோலி ஆகியோரை விரைவில் பெவிலியன் அனுப்பியது.

இன்னொரு 300 ரன் ரகப் பிட்சில் இங்கிலாந்து விரட்டல் வெற்றி சாத்தியத்தை நோக்கி டாஸ் வென்று இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. உமேஷ் யாதவ்வுக்குப் பதில் புவனேஷ் குமார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தொடக்க வீரர்களான ராகுல், தவண் தங்களது இடத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டி போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 5 ரன்கள் எடுத்த லோகேஷ் ராகுல், கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்து ஆஃப் ஸ்டம்பிலிருந்து லேசாக உள்ளே வந்து பிறகு வெகுலேசாக வெளியே எடுத்தது, இதனால் தன் பேட்டிங் நிலையில் ‘ஸ்கொயர்’ ஆனார் ராகுல், எட்ஜ் எடுத்தது ஸ்டோக்ஸ் ஸ்லிப்பில் டைவ் அடித்து தரைக்கு சற்று மேலே பந்தை பிடித்தார்.

அதே ஓவரில் இந்திய அணிக்கு பெரிய அதிர்ச்சிக் காத்திருந்தது. இரண்டு அற்புதமான ஆஃப் திசை பவுண்டரிகளை அடித்த கோலி 8 ரன்களில் இருந்த போது ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே யார்க்கர் லெந்தில் விழுந்த பந்தை ஆடினார் எட்ஜ் எடுத்தது கோலி கால்களை நகர்த்தாமல் ஆடியது தவறு, மீண்டும் ஸ்டோக்ஸ் பிடித்துப் போட்டார். ஷார்ட் பிட்ச் உத்தியை பயன்படுத்துவோம் என்று கூறி கடைசியில் யார்க்கர் லெந்த் பந்தை வீச கால்களை நகர்த்தாமல் கோலி ஆடி எட்ஜ் செய்தார். இங்கிலாந்தின் பொறியில் கோலி சிக்கினார் என்றே கூற வேண்டும்.

ஷிகர் தவணுக்கு மிகவும் பழைய உத்திதான், 2 ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசிவிட்டு ஒரு புல் லெந்த் பந்து, அவ்வளவுதான், கால்களை நகர்த்தாமல் பெரிய கவர் டிரைவ் ஆட நினைத்தார், பந்தை வாங்கி உள்ளே விட்டுக் கொண்டார். இதே ஓவரில்தான் வோக்ஸ் வீசிய முதல் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்தார் ஆனால் வோக்ஸ் அதை நழுவ விட்டார். வாய்ப்பை தவண் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. தவண் ஆடும் கடைசி போட்டியாக இது இருக்கலாம்.

யுவராஜ் சிங் களமிறங்கி 6 பவுண்டரிகளுடன் 38 பந்துகளில் 30 ரன்களுடனும் தோனி 31 பந்துகளில் 15 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். இந்தியா 16-வது ஓவரில் 74/3 என்று உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in