

இந்திய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் தேசிய அளவிலான நீச்சல் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் வரும் நவம்பர் இறுதியில் நடைபெறவுள்ளது. அதற்கான தமிழக மகளிர் அணி தேர்வு மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ள நீச்சல்குளத்தில் நேற்று நடைபெற்றது.
மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பரமேஸ்வரி ஆகியோர் போட்டியைத் தொடங்கி வைத்தனர். 14 வயதுக்குட்பட்டோர், 17 வயதுக்குட்பட்டோர் மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் என 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 50 மீ., 100 மீ., 200 மீ., 800 மீ. என மொத்தம் 46 போட்டிகள் நடைபெற்றன. தமிழகம் முழுவதிலுமிருந்து சுமார் 150 மாணவிகள் கலந்துகொண்டனர். ஒவ்வொரு பிரிவில் இருந்தும் தலா 2 மாணவிகள் என மொத்தம் 92 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.