

பாரா ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெறும் உயரம் தாண்டும் போட்டியில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலு பங்கேற்கிறார். இவர் சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அடுத்த பெரியவடகம்பட்டி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது பெற்றேர் தங்கவேல்- சரோஜா. செங்கல் சூளை மற்றும் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர்.
21 வயதான மாரியப்பன் சேலம் தனியார் கல்ல்லூரியில் பிபிஏ படித்து வருகிறார். இவருக்கு ஒரு சகோதரி, இரண்டு சகோதரர்கள் உள்ளனர்.
மாரியப்பன் ஐந்து வயது இருக்கும்போது, வீட்டின் அருகேயுள்ள கோயில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த பேருந்து மோதியதில் அவரது வலது கால் கட்டை விரலை தவிர மற்ற கால் பகுதிகள் சிதைந்து, ஊனமானார்.
விளையாட்டில் மிகுந்த ஆர்வமுள்ள மாரியப்பன் உயரம் தாண்டுதல் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளார். பாரா ஒலிம்பிக் போட்டி குறித்து மாரியப்பன் கூறும்போது, “பள்ளி பருவத்தில் உயரம் தாண்டுதலில் அசாத்தியமான எனது திறமையை அறிந்த உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன், எனக்கு ஊக்கம் கொடுத்து பயிற்சி அளித்தார்.
மாவட்ட மற்றும் மாநில அள வில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றேன். கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று தங்கம் வென்று சாதனை படைத்தேன்.
கடந்த முறை நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் அதிகபட்சமாக 1.74 மீட்டர் உயரமே தாண்டினர். இந்த முறை நான் 2 மீட்டர் உயரத்தை தாண்டி உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வெல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.
பாரா ஒலிம்பிக் போட்டியில் மாரியப்பன் பங்கேற்க நித உதவி வழங்கி ஊக்கம் அளித்து வரும், வாலிபால் பெடரேஷன் ஆப் இந்தியா தலைவர் சந்திரசேகரன் மற்றும் பயிற்சியாளர் சத்யநாராயணன் ஆகியோர் கூறும்போது, “பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் மாரியப்பன் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பெங்களூருவில் கடந்த 3 மாதமாக மாரியப்பனுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்போட்டியில் மாரியப்பன் ஒரே தாவலில், உலகின் பார்வையை தன் வசம் ஈர்த்து, 100 சதவீதம் வெற்றியுடன், தங்கம் வென்று தாயகம் திரும்புவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அவர் வெற்றி பெற உங்களுடன் சேர்ந்து, நாங்களும் கடவுளை பிராத்திக்கிறோம்” என்றனர்.