கோலியை மட்டுமே சார்ந்திருப்பதாக நினைப்பது மற்ற வீரர்களின் திறனை குறைத்து மதிப்பிடுவதாகும்: கபில் தேவ்

கோலியை மட்டுமே சார்ந்திருப்பதாக நினைப்பது மற்ற வீரர்களின் திறனை குறைத்து மதிப்பிடுவதாகும்: கபில் தேவ்
Updated on
2 min read

விராட் கோலியின் பார்மால் சாம்பியன்ஸ் டிராபி தொடர் குறித்து கவலைப்பட வேண்டிய தேவையில்லை. இந்திய அணியின் பேட்டிங் கோலியை மட்டும் சார்ந்திருக்கவில்லை என 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார்.

இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி, ஐபிஎல் தொடரில் இந்த சீசனில் எதிர்பார்த்த அளவுக்கு ரன்கள் சேர்க்கவில்லை. அவர் 9 ஆட்டங்களில் 27.77 சராசரியுடன் 250 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். வரும் 1-ம் தேதி இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்க உள்ள நிலையில் கோலியின் பேட்டிங் பார்ம் கவலையளிப்பதாக உள்ளது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் கபில்தேவின் மெழுகுச்சிலை திறக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட கபில்தேவிடம், கோலியின் பேட்டிங் பார்ம், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு அவர் பதிலளிக்கையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தர்மசாலா போட்டியை நீங்கள் பார்த்தீர்களா?, அந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக கோலி விளையாடாவிட்டால் இந்திய அணி தோல்வியடைந்துவிடும் என கருதினர். ஆனால் அந்த போட்டியில் என்ன நடைபெற்றது என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்திய அணியின் வாய்ப்புகள் கோலியை மட்டுமே சார்ந்து இருப்பதாக நினைத்து அணியில் உள்ள மற்ற வீரர்களின் திறனை குறைத்து மதிப்பிடுவது நியாயமற்றது. கோலி அணியில் மிக முக்கியமான வீரர். எப்படி விளையாட வேண்டும், எந்த இடத்தில் திறனை வெளிப்படுத்த வேண்டும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்.

கோப்பையை வெல்லும் திறன் இந்திய அணியிடம் நிச்சயம் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாகவே நமது அணி சிறப்பாக விளையாடி வருகிறது. ஆனால் போட்டி நடைபெறும் தினத்தன்று திட்டங்களை களத்தில் எப்படி செயல்படுத்துகிறார்கள் என்பதை பொறுத்துதான் வெற்றி அமையும். அதேவேளையில் எதிரணிக்கு நெருக்கடி கொடுப்பதும் முக்கியமானது.

வெற்றி என்பது அணியில் உள்ள ஒரு பந்து வீச்சாளரை மட்டும் சார்ந்தது இல்லை. யாரவது ஒருவர் பந்து வீச்சை வழிநடத்தலாம். ஆனால் அனைவரும் கூட்டாக செயல்பட்டால்தான் வெற்றிக்கான வாய்ப்புகளை உருவாக்க முடியும். தற்போதுள்ள வீரர்கள் எங்களைவிட அதிக ஆர்வமாக உள்ளனர்.

நாங்கள் தொழில்முறை வீரர்களாக இல்லாமல் இருந்தோம். அவர்கள் தொழில்முறை வீரர்களாகவும் விளையாடுகின்றனர். ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்களை சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தேர்வுக்குழுவினர் தேர்வு செய்யவில்லை என்ற கருத்து எழுந்துள்ளது.

அவர்கள் இளம் வீரர்களை தேர்வு செய்திருந்தால், மூத்த வீரர்களை புறக்கணித்துவிட்டார் என்ற கேள்வியையும் நீங்கள் எழுப்புவீர்கள். என்னை பொறுத்தவரையில் தேர்வுக்குழுவினரை விமர்சிப்பது நியாயமற்றது. அவர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.

எனது கருத்துகளும் வித்தியாசமாக இருக்கலாம். ஆனால் தேர்வுக்குழுவினரை விமர்சிப்பது எனது வேலை இல்லை. என்னைப் போன்று வேகப்பந்து வீச்சாளர் ஆல்ரவுண்டர் உருவாக வாய்ப்பு இல்லை.

எனினும் என்னைவிட சிறப்பாக செயல்படும் 100 கபில்தேவ்களை இந்தியா உருவாக்க வாழ்த்துகிறேன். ஆனால் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது. அஸ்வின், ஜடேஜா ஆகியோர் சிறந்த ஆல்ரவுண்டர்களாக இந்திய அணிக்கு இருப்பார்கள். போதுமான அளவில் ஆல்ரவுண்டர்கள் நம்மிடம் இருப்பதாகவே நான் கருதுகிறேன்.

இவ்வாறு கபில் தேவ் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in