4 கோல் கனவு நனவானது - நெய்மர் நெகிழ்ச்சி

4 கோல் கனவு நனவானது - நெய்மர் நெகிழ்ச்சி
Updated on
1 min read

ஜப்பானுக்கு எதிராக 4 கோல் அடித்ததன் மூலம் ஒரு போட்டியில் 4 கோல் அடிக்க வேண்டும் என்ற தனது கனவு நனவானதாக பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெற்ற நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் பிரேசில் அணி 4-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை தோற்கடித்தது. பிரேசிலின் 4 கோல்களையுமே நெய்மர்தான் அடித்தார். இதன்மூலம் பிரேசிலுக்காக ஒரு போட்டியில் 4 கோல்கள் அடித்த ஒரு சில வீரர்களில் தானும் ஒருவர் என்ற பெருமையைப் பெற்றுள்ள நெய்மர், 40 கோல்களுடன் (58 போட்டிகளில்) அதிக கோல் அடித்த பிரேசில் வீரர்கள் வரிசையில் 5-வது இடத்தில் உள்ளார். பீலே (77 கோல்), ரொனால்டோ (62 கோல்), ரொமாரியோ (55 கோல்), ஜிகோ (48 கோல்) ஆகியோர் அதிக கோல் அடித்த பிரேசில் வீரர்கள் வரிசையில் முதல் 4 இடங்களில் உள்ளனர்.

ஜப்பானுக்கு எதிராக 4 கோல் அடித்தது தொடர்பாக பேசிய நெய்மர், “4 கோல்களை அடித்தபோது வியந்துபோனேன். மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். 4 கோல் அடிக்க வேண்டும் என்ற எனது கனவு நனவானபோது மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். எனது உடல் சிலிர்த்துவிட்டது” என்றார்.

நெய்மருக்கு முன்னதாக ஒரே போட்டியில் 4 கோல் அடித்த பிரேசில் வீரர் ரொமாரியோ ஆவார். அவர் 2000-ல் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் தகுதிச்சுற்றில் 4 கோல் அடித்தார். அவரைப் பற்றி பேசிய நெய்மர், “அவர்தான் எப்போதுமே எனது முன்மாதிரி. அதற்கு என்ன காரணம் என்றால் பார்சிலோனா அணிக்காக விளையாடிய ரொமாரியோ எண்-11 பொறிக்கப்பட்ட டி-சர்ட்டை அணிந்திருந்தார். அதே எண் பொறிக்கப்பட்ட டி-சர்ட்டைதான் நான் இப்போது (பார்சிலோனாவுக்காக) அணிந்து விளையாடுகிறேன்” என்றார்.

நெய்மரின் கோல் சராசரியை கணக்கிட்டால் அது பீலேவின் சராசரிக்கு அடுத்தபடியாக உள்ளது. இதேவேகத்தில் நெய்மர் சென்றால் அவர் தனது 27-வது வயதில் பீலேவின் கோல் சாதனையை (77 கோல்) முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அது தொடர்பாக பேசிய நெய்மர், “எனது எல்லை எது என்று எனக்குத் தெரியாது. பீலேவின் சாதனையை முறியடிப்பது பற்றி நான் சிந்திப்பதும் இல்லை.

அது என்னுடைய இலக்கும் அல்ல. கோல் அடித்து அணியின் வெற்றிக்கு உதவுவதும், சக வீரர்களுக் கு உதவுவதும் மட்டுமே எனது இலக்கு” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in