

"ஒலிம்பிக் மல்யுத்த போட்டிகளில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை நான் வென்றெடுப்பேன் என சற்றும் எதிர்பார்க்கவில்லை!"
ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், தனது 12 ஆண்டு கடின உழைப்பின் பலனாக வெற்றி கிட்டியுள்ளதாகக் கூறியுள்ளார்.
ரியோ ஒலிம்பிக் 2016-ல் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்று கணக்கைத் தொடங்கியுள்ளது. மகளிர் 58 கிலோ ஃப்ரீஸ்டைல் எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியில் சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவின் பதக்க தாகத்தை தணித்திருக்கிறார்.
தனது வெற்றி குறித்து அவர் கூறும்போது, "எனது 12 வருட கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி இது. கடந்த முறை லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் கீதா முதல்முறையாக மல்யுத்த போட்டிக்கு தகுதி பெற்றார். நான் இப்போது பதக்கம் வென்றிருக்கிறேன்.
ஒலிம்பிக் மல்யுத்த போட்டிகளில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை நான் வென்றெடுப்பேன் என சற்றும் எதிர்பார்க்கவில்லை. இன்னும் மல்யுத்தப் போட்டிகள் நிறைவடையவில்லை. மற்ற வீரர்களும் சிறப்பாக செயல்படுவார்கள் என எதிர்பார்க்கிறேன்" என்றார்.
போட்டியில் சிறப்பாக தாக்குப்பிடித்த சாக்ஷி தனது விளையாட்டு நுட்பங்கள் குறித்து கூறும்போது, "நான் இறுதி நொடி வரை போராடினேன். ஐந்து நிமிடங்கள் எதிரியை தாக்குப்பிடித்தால் வெற்றி வசமாகும் எனத் தெரியும். இறுதிச் சுற்றில் என் முழு பலத்தையும் பயன்படுத்தி தன்னம்பிக்கையுடன் விளையாடினேன்.
எனது வெற்றியை என்னுடைய மக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அவர்களது எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படுவேன்" என்றார்.