Published : 05 Jan 2017 08:59 PM
Last Updated : 05 Jan 2017 08:59 PM

தோனி ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தால் தர்ணா போராட்டம் செய்திருப்பேன்: சுனில் கவாஸ்கர்

கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்திருந்தால், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருப்பேன் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் டி 20 போட்டிகளில் ஆடும் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இந்து விலகுவதாக நேற்று முன்தினம் தோனி அறிவித்தார். இருப்பினும் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக அவர் அணியில் தொடர்வார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினாலும், கிரிக்கெட் விளையாட்டில் இருந்து தோனி விலகாதது மகிழ்ச்சி அளிக்கிறது. கிரிக்கெட் விளையாட்டில் அவர் இன்னும் சாதிக்க வேண்டியுள்ளது. கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்திருந்தால், அந்த முடிவைக் கைவிடக் கோரி அவரது வீட்டின் முன் நான் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருப்பேன். ஒரு கிரிக்கெட் வீரராக, சில ஓவர்களிலேயே ஆட்டத்தின் முடிவை மாற்றி அமைக்கக்கூடிய வல்லமை தோனிக்கு இருக்கிறது. அவரைப்போன்ற ஆட்டக்காரர்கள் இந்திய அணிக்கு அவசியம் தேவைப்படுகிறார்கள்.

தோனியை விராட் கோலி நான்காவது அல்லது ஐந்தாவது பேட்ஸ்மேனாக களமிறங்க வைப்பார் என்று எதிர்பார்க்கிறேன். அதைவிட பின்வரிசையில் அவரை ஆடவைப்பது சரியாக இருக்காது. ஆட்டத்தை முடித்துக் கொடுப்பதில் தோனி கெட்டிக்காரர் என்றாலும், பேட்டிங்கில் அவருக்கு கூடுதல் நேரத்தை கொடுக்கவேண்டும். கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதால், விக்கெட் கீப்பிங்கில் தோனியின் திறமை மேலும் பளிச்சிடும் என்று நம்புகிறேன்.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிவரை கேப்டன் பதவியில் தோனி தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி பெற்ற வெற்றிகள், இந்த முடிவை எடுக்க தோனியை தூண்டியிருக்க வேண்டும். கேப்டன் பதவியில் இல்லாவிட்டாலும், தோனியின் அமைதியும், பொறுமையும் கோலிக்கு கைகொடுக்கும் என்று நம்புகிறேன். இப்போதைக்கு தோனிக்கு சரியான மாற்று இல்லாததால் அவர் அடுத்த உலகக் கோப்பை வரை ஆடுவார் என்று எதிர்பார்க்கிறேன். ஆனால் கிரிக்கெட் ஒரு விந்தையான விளையாட்டு. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

இவ்வாறு சுனில் கவாஸ்கர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x