Last Updated : 24 May, 2017 07:43 AM

 

Published : 24 May 2017 07:43 AM
Last Updated : 24 May 2017 07:43 AM

ஏ கிரேடு ஒப்பந்த வீரர்களுக்கு 150 சதவீத சம்பள உயர்வு வேண்டும்: விராட் கோலி, அனில் கும்ப்ளே வலியுறுத்தல்

இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாடுவதற்காக ஏ கிரேடில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வீரர்களின் ஊதியத்தை 150 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும் என பயிற்சியாளர் அனில் கும்ப்ளே, கேப்டன் விராட் கோலி ஆகியோர் பிசிசிஐ நிர்வாகக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளனர்.

தற்போது ஏ கிரேடு வீரர்களுக்கு ரூ.2 கோடியும், பி கிரேடு வீரர்களுக்கு ரூ.1 கோடியும், சி கிரேடு வீரர்களுக்கு ரூ.50 லட்சமும் வழங்கப்பட்டு வருகிறது. ஹைதராபாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிசிசிஐ நிர்வாகக்குழுவை நேரில் சந்தித்த கும்ப்ளே ஊதிய உயர்வு தொடர்பாக விரிவான முன்மொழிவை வழங்கினார்.

அப்போது பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோஹ்ரி, இணை செயலாளர் அமிதாப் சவுத்ரி, பொருளாளர் அனிருத் சவுத்ரி ஆகியோரும் உடனிருந்தனர். இந்த குழுவை ஸ்கைப் வழியாக விராட் கோலி தொடர்பு கொண்டு தனது விளக்கத்தையும் கூறி உள்ளார்.

ஏ கிரேடில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வீரர்கள் அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாடும் திறன் உள்ளவர்கள் என்பதால் அவர்களுக்கு ஒரு சீசனுக்கு ரூ.5 கோடி ஊதியம் வழங்க வேண்டும் என கோலியும், கும்ப்ளேவும் வலியுறுத்தி உள்ளனர்.

பிசிசிஐ நிர்வாகிகள் குழு தலைவர் வினோத் ராய், விக்ரம் லிமாயே ஆகியோர் கும்ப்ளே, கோலியின் கருத்து களை முழுவதுமாக செவி கொடுத்து கேட்டுக்கொண்டனர். அதேவேளையில் இதுதொடர்பாக பிசிசிஐ நிர்வாகிகளை குறிப்பு எடுத்துக்கொள்ளவும் அறிவுரை வழங்கினர்.

இதுதொடர்பாக பிசிசிஐ வட்டாரங்கள் கூறும்போது, "டெஸ்ட் போட்டிகளில் விளையா டும் வீரர்களுக்கு அதிக ஊதியம் வழங்க வேண்டும் என கும்ப்ளே, கோலி ஆகியோர் அழுத்தம் கொடுத்துள்ளனர். சேதேஷ்வர் புஜாரா போன்ற வீரர்களுக்கு ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைப்பதில்லை.

அதேவேளையில் ரஞ்சி கோப்பையில் விளையாடாத பவன் நெகிக்கு ஐபிஎல் தொடரில் 45 நாட்கள் விளையாடுவதற்கு ரூ.8.5 கோடி கிடைக்கிறது. இதனால் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது'' என்றனர்.

வீரர்களின் ஊதிய உயர்வுடன் தனக்கும், உதவி பயிற்சியாளர் கள் மற்றும் தொழில்நுட்ப குழு வினரிடம் ஊதியத்தையும் கணிச மாக உயர்த்த வேண்டும் எனவும் கும்ப்ளே வலியுறுத்தியுள்ளார்.

கும்ப்ளே தற்போது தோரய மாக ரூ.6.25 கோடி ஊதியம் பெற்று வருகிறார். இதில் 25 சதவீதம் உயர்வு வேண்டும் என கோரிக்கை வைத்ததாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் 3 வடிவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கும் வெவ்வேறு அணிகளை பயன்படுத்த வேண் டும். இதன் மூலம் வீரர்களின் தரத்துக்கு தகுந்தபடி சம்பள ஒப்பந்தங்களை ஏற்படுத்தலாம் என்று கும்ப்ளே ஆலோசனை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

கும்ப்ளேவின் பயிற்சியாளர் ஒப்பந்தம் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் முடிவடைகிறது. எனினும் அவர் ஜூன் மாத இறுதியில் நடைபெறும் மேற்கிந்தியத் தீவுகள் தொடர் வரை பணியாற்றுவார் என தெரிகிறது. இதன் பின்னர் இலங்கை தொடருக்கு முன்னதாக அவர் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும் என கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x