

பிரிஸ்பனில் யு.ஏ.இ. அணியை எதிர்த்து அயர்லாந்து அணி ஆடி வருகிறது. இதில் அயர்லாந்து வீரர் எட் ஜாய்ஸ் பவுல்டு ஆகி அதிசயமாகத் தப்பித்தார்.
அயர்லாந்து அணி 279 ரன்கள் இலக்கை எதிர்த்து விளையாடி வருகிறது. இந்நிலைய்ல் ஆட்டத்தின் 11-வது ஓவரை யு.ஏ.இ. வேகப்பந்து வீச்சாளர் அம்ஜத் ஜாவேத் வீச வந்தார். எட் ஜாய்ஸ் 16 ரன்களில் ஆடி வந்தார். இவர் இடது கை வீரர்.
அந்த ஓவரின் 4-வது பந்து யார்க்கராக அமைய எட் ஜாய்ஸ் பேட்டை இறக்கு முன் பந்து ஸ்டம்பில் அடிக்க பைல்கள் மேலே கிளம்பியது. லைட் எரிந்தது. ஆனால் என்ன அதிசயம்... மேலே எழும்பிய பைல்கள் கனகச்சிதமாக திரும்ப வந்து அமர்க்களமாக ஸ்டம்பின் மேல் உட்கார்ந்தது. பவுல்டு என்று யு.ஏ.இ. கொண்டாடத் தொடங்கிய வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் கொண்டாட்டம் சோகமாக ஆனது.
அது நாட் அவுட். பைல்கள் முழுதும் பெயர வேண்டும், ஆனால் பெயரவில்லை. ஸ்டம்பில் ஏதோ காந்தசக்தி திடீரென ஏற்பட்டு மேலெழுந்த பைல்கள் திரும்ப இருந்த இடத்துக்கே வந்து அமர்ந்தது.
இது போன்று முன்பு சில முறை நடந்தது. இந்த உலகக்கோப்பையில் இப்போது முதன் முறையாக எட் ஜாய்ஸ் பக்கம் அதிர்ஷ்டம் அடித்தது. ஆனால் அதிர்ஷ்டம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 19-வது ஓவரில் அவர் அதே அம்ஜத் ஜாவேத் பந்தை விக்கெட் கீப்பர் பாட்டீலிடம் கேட்ச் கொடுத்து 37 ரன்களில் வெளியேறினார்.
அயர்லாந்து தற்போது 39.1ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை எடுத்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 100 ரன்கள் தேவை என்ற நிலையில் கேரி வில்சன் 48 ரன்களுடனும், அதிரடி உ.கோப்பை சத நாயகன் கெவின் ஓ பிரையன் 4 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.