

கடந்த 1998 ஆம் ஆண்டு இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடை யிலான கிரிக்கெட் போட்டியின் போது, ஆஸ்திரேலிய ரசிகர் ஒருவர் “இந்தியர்கள் திருடர்கள்; 20 பேருடன் விளையாடுகிறார்கள். சச்சின் 10டுல்கர்+10 வீரர்கள்” என்று எழுதிய பதாகையை ஏந்தியிருந்தார்.
அந்த வார்த்தைகளுக்கு சச்சின் நிச்சயமாக உரியவர்தான். பெரும்பாலான சமயங்களில் எதிரணியினர் வெளிப்படையாகவே சொல்லியிருக்கின்றனர். நாங்கள் இந்தியாவிடம் தோற்கவில்லை; சச்சினிடம் தோற்றோம் என்று. சச்சின் தனது 200ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார். இது மகத்தான சாதனை.
இரண்டாமிடத்தில் உள்ள பாண்டிங் (168), ஸ்டீவ் வாக் (168) இருவரும் ஓய்வு பெற்று விட்டனர். விளையாடிக் கொண்டிருப்பவர்களில், தென் ஆப்பிரிக்காவின் காலிஸுக்கு (164) 38 வயதாகிறது. அதற்கடுத்த இடத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சந்தர்பால் (149) 40 வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார். இலங்கையின் ஜெயவர்த்தனா (138) 37 வயதை நெருங்குகிறார். ஆக, இப்போதைக்கு யாரும் 200 டெஸ்ட் போட்டிகள் என்ற சாதனையை எட்டப்போவதில்லை. அநேகமாக முறியடிக்கப்படாத சாதனை யாகவே இது நீடிக்கும்.
பெரும்பாலான அணிகளின் ஒட்டுமொத்த சாதனைக்கு நிகராக சச்சினின் சாதனையும் இருக்கிறது. இந்திய அணியில் மிக மூத்த வீரர் சச்சின். அவர் 200 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள நிலையில், அணியில் இடம் பெற்றுள்ள மற்ற 10 வீரர்களின் ஒட்டு மொத்த டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கையைக் கூட்டினாலும் அது 200-ஐத் தொடவில்லை.
சச்சினின் 200ஆவது டெஸ்ட் போட்டியில் ஆடும் வாய்ப்பைப் பெற்றுள்ள இந்திய வீரர்களில் சச்சினுக்கு அடுத்தபடியாக அதிக டெஸ்ட் போட்டியில் விளையாடியிருப்பவர் கேப்டன் தோனி. அவர் 78 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
அதற்கடுத்து 19 போட்டிகளே விளையாடியுள்ள கோலி மூன்றாமிடத்தில் இருக்கிறார்.
சச்சின் சர்வதேசப் போட்டியில் அறிமுகமானதற்குப் பிறகு பிறந்த இரண்டு பேர், சச்சினுடன் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். 5 போட்டிகளில் விளையாடியுள்ள புவனேஷ்வர் குமாரும், இந்த டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி யுள்ள முகமது ஷமியும்தான் அவர்கள்.
சச்சின் தனது 15 ஆவது வயதில் வினோத் காம்ப்ளியுடன் இணைந்து 664 ரன்கள் குவித்தபோது, ஒரு ஆங்கில நாளிதழ் மற்றொரு கவாஸ்கர் உருவாகியிருக்கிறார் என்று வர்ணித்திருந்தது. அக்கட்டுரையாளருக்கு அப்போது தெரிந்திருக்காது. அவர் இரண்டாவது கவாஸ்கராக உருவெடுக்க வில்லை, முதலாவது சச்சினாக உருவெடுக்கிறார் என்று.