ஸ்மித் இல்லாமலேயே ஏரோன் பிஞ்ச், ஹெட் அதிரடியில் இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

ஸ்மித் இல்லாமலேயே ஏரோன் பிஞ்ச், ஹெட் அதிரடியில் இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
Updated on
2 min read

சாம்பியன்ஸ் டிராபிக்கான பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணியை ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஓவலில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் இலங்கையை பேட் செய்ய அழைத்தது. கேப்டன் மேத்யூஸ் 95 ரன்களையும் கடைசியில் டி.ஏ.எஸ். குணரத்னே 70 ரன்களையும் விளாச அந்த அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 318 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணியில் 109 பந்துகளில் 11 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 137 ரன்களை ஏரோன் பிஞ்ச் விளாச, டிராவிஸ் ஹெட் 73 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் எடுத்து ஒரு முனையில் நாட் அவுட்டாகத் திகழ 49.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 319 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. கேப்டன் வார்னர் 19 ரன்களில் முதலில் வெளியேறினார்.

விரட்டலின் போது ஒரு நேரத்தில் பிஞ்ச், மேக்ஸ்வெல், வேட் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 242/6 என்ற நிலையில் இலங்கைக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால் ஸ்டாய்னிஸ், கமின்ஸ், பேட்டின்சனை வைத்துக் கொண்டு டிராவிஸ் ஹெட் வெற்றிக்கு இட்டுச் சென்றார். ஆனால் 60 ரன்களில் ஹெட் இருந்த போது அவருக்கு ஒரு லைஃப் அளிக்கப்பட்டது.

வெற்றி ஸ்மித் இல்லாமல் நிகழ்ந்தது என்பதுதான் ஆஸ்திரேலியாவுக்கு இந்தப் போட்டியில் கூடுதல் சாதக அம்சமாகும். இலங்கை அணி ஸ்காட்லாந்துடன் தோற்றது என்பதும் கவனிக்கத்தக்கது.

முதலில் பேட் செய்த இலங்கை அணி தொடக்கத்தில் டிக்கிவெலாவின் 30 பந்து 41 ரன்களில் அதிரடி தொடக்கம் கண்டாலும் தரங்கா, மெண்டிஸ், சந்திமால் ஆகியோர் சோபிக்காமல் அவுட் ஆக ஒரு நேரத்தில் 28 ஓவர்களில் 128/5 என்று தடுமாறியது. அதன் பிறகே மேத்யூஸ், குணரத்ன 92 பந்துகளில் 91 ரன்களைச் சேர்த்தனர்.

71/3 என்று இருந்த போது மேத்யூஸ் களம் புகுந்தார். அரைசதத்தை 77 பந்துகளில் எட்டினார். அதன் பிறகு வெளுத்துக் கட்டி சதம் எடுக்கும் முன் ஸாம்பா பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஜோஷ் ஹேசில்வுட்டின் 49-வது ஓவரை குணரத்னே பதம் பார்த்தார், 3 சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி விளாசினார். ஆல்ரவுண்டர் செகுகே பிரசன்னா 19 பந்துகளில் 31 ரன்கள் விளாச, கடைசி 7 ஓவர்களில் சுமார் 70 ரன்களை குவித்தது இலங்கை.

ஆஸ்திரேலியா தரப்பில் பேட்டின்சன் 80 ரன்களை கொடுத்து ஏமாற்றம் அளித்தார். மோய்சஸ் ஹென்றிக்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கமின்ஸ் சிக்கனமாக வீசினார். டிராவிஸ் ஹெட் 3 ஓவர்களில் 13 ரன்களுக்கு 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.

ஆஸ்திரேலியாவும் விரட்டலை அபாரமாக நிகழ்த்தியது, வார்னர் ஆட்டமிழந்தாலும் பிஞ்ச் அதிரடி ஆட்டம் ஆடத் தொடங்க அவர் 76 பந்துகளில் சதம் எட்டினார். ஹெட்டும் இவரும் இணைந்து 75 ரன்களைச் சேர்த்தனர். ஆனால் இதன் பிறகு பிஞ்ச், மேக்ஸ்வெல் ஆகியோரை நுவான் பிரதீப் அடுத்தடுத்து வீழ்த்த இலங்கைக்கு சற்றே நம்பிக்கை வந்தது. ஆஸ்திரேலிய அணிக்கு 15 பந்துகளில் 21 தேவை என்ற தருணத்தில் ஹெட்டுக்கு கேட்ச் விட்டது இலங்கை.

ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in