Published : 03 Oct 2014 09:15 AM
Last Updated : 03 Oct 2014 09:15 AM

ஆசிய விளையாட்டு கபடி: தங்கம் வென்றது இந்தியா

ஆசிய விளையாட்டு பெண்களுக்கான கபடியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தங்கம் வென்றுள்ளது.

ஆசிய விளையாட்டு மகளிருக்கான கபடிப் போட்டியில் இந்தியா தங்கம் வென்றுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கம் வெல்வது இது இரண்டாவது முறையாகும்.

17-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் தென் கொரியாவின் இன்சியான் நகரில் நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை நடந்த மகளிர் கபடி இறுதிப் போட்டியில் இந்தியா - இரான் அணிகள் மோதின. இந்திய அணி 31-21 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

ஆசிய விளையாட்டுப் போடிகளில் இந்திய மகளிர் அணி தங்கம் வெல்வது இது இரண்டாவது முறையாகும், கடந்த முறை சீனாவின் குவாங்சுவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் இந்தியா தங்கம் வென்றது.

இறுதிப் போட்டியில், ஆரம்பத்தில் சற்று சறுக்கல்களை சந்தித்த இந்திய அணியினர் பின்னர் சுதாரித்துக் கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய அணியை சமாளிக்க முடியாமல் இரான் அணி தோல்வியைத் தழுவியது.

இரான் வெள்ளிப் பதக்கம் வென்றது. கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரான் வெண்கலம் வென்றது. இம்முறை ஒருபடி முன்னேறியுள்ளது.

கேப்டன் தேஜஸ்வினி பேட்டி:

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரான் அணியின் செயல்பாட்டை கூர்ந்து கவனித்துவந்தோம். இறுதிப் போடியில் இரானுடனான விளையாட்டு நிச்சயம் சவால் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்த்தோம். அதற்கேற்றவாறு வியூகங்களை வகுத்தோம். அணியில் அனுபவம் வாய்ந்த மூத்த வீராங்கனைகளும், இளம் வீராங்கனைகளும் சரிவிகிதத்தில் இருந்ததால் எங்களால் நிலைமையை சமாளிக்க முடிந்தது. எங்கள் திட்டத்தின்படி விளையாடி வெற்றி கண்டுள்ளோம் என இந்திய அணி கேப்டன் தேஜஸ்வினி தெரிவித்துள்ளார்.

பெண்கள் கபடிப் போட்டி நாளுக்கு நாள் வலுப்பெற்று வருவதாக கூறிய அவர், கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியைவிட இப்போட்டிக்கு கூடுதல் பயிற்சி தேவைப்பட்டதாக கூறினார்.

இரான் அணி சிறப்பாக விளையாடியதாக இந்திய பயிற்சியாளர் எடச்சேரி பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x