

பதக்கத்தை திருப்பி அளித்த இந்திய குத்துச் சண்டை வீராங்கனை சரிதா தேவி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
ஆசிய விளையாட்டுப் போட்டி மகளிர் 60கிலோ உடல் எடைப்பிரிவில் வெண்கலம் வென்ற சரிதா தேவி தனக்கு அநீதி இழைக்கப்பட்டதையடுத்து பதக்கத்தைத் திருப்பி அளித்தார்.
இதனால் அவர் மீது அனைத்திந்திய குத்துச் சண்டை கூட்டமைப்பு ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவிருக்கிறது.
இது குறித்து சரிதா தேவி கூறும்போது, “பதக்கத்தை நான் ஏற்க விரும்பவில்லை என்பதல்ல விஷயம், நான் அதை ஏற்றுக் கொண்டு பிறகுதான் கொரிய வீராங்கனையிடம் கொடுத்தேன். எனது குத்துச் சண்டை வாழ்க்கையைத் தொடர நான் இப்படி செய்வது அவசியமாகிறது இல்லையெனில் அநீதி மீண்டும் மீண்டும் மனதில் வந்து என்னை உருக்குலையச் செய்து விடும். இப்போது எனது குழந்தையை நான் அரவணைக்கப் போகிறேன்.
நான் எந்த விளைவுகளையும் சந்திக்கத் தயார். அநீதி இழைக்கப்பட்டுள்ளது, ஒரு இந்திய அதிகாரி கூட எங்களை ஆறுதல் செய்ய வரவில்லை, கண்டுகொள்ளவும் இல்லை.
பதக்கத்தை வாங்க மறுத்தது பற்றி ஏ.ஐ.பி.ஏ அதிகாரியான டேவிட் பி.பிரான்சிஸ் ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலிடம் அளித்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்த ஒட்டுமொத்த காட்சியும் சரிதா தேவி மற்றும் அவரது அணியினரால் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. போட்டியில் என்ன நடந்திருந்தாலும், பதக்கத்தை வாங்க மறுத்தது வருத்தத்திற்குரியது.
ஆகவே சரிதா தேவி ஒரு முன்னுதாரணமாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக இந்த சம்பவத்தை ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும். எந்த வீரரும் நியாயமான விளையாட்டு உணர்வுடன் செயல்படுவது அவசியம். அவரை யாரும் பின்பற்றி விடக்கூடாது என்று ஒரு டெக்னிக்கல் டெலிகேட்டாக நான் கூற விரும்புகிறேன்” என்று அதில் அவர் கூறியுள்ளார்.
மேலும் எதிர்ப்பு தெரிவிக்கையில் ஏ.ஐ.பி.ஏ.-வை சரிதா தேவி கலந்தாலோசிக்கவில்லை. விதிமுறைகளையும் கடைபிடிக்கவில்லை. நடுவர் தீர்ப்புகளை எதிர்ப்பது விதிமீறல் என்று கூடவா அவருக்குத் தெரியாது என்று அந்த அறிக்கையில் அநீதியை விடுத்து பாதிக்கப்பட்ட சரிதா தேவி மீது புகார் சுமத்தப்பட்டுள்ளது.