4X100 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சலில் அசத்தல்: தங்க வேட்டையை தொடங்கினார் பெல்ப்ஸ்

4X100 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சலில் அசத்தல்: தங்க வேட்டையை தொடங்கினார் பெல்ப்ஸ்
Updated on
2 min read

ரியோ ஒலிம்பிக் நீச்சல் போட்டி யில் அமெரிக்க வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் தங்க வேட்டையை தொடங்கினார்.

ஆடவருக்கான 4X100 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சல் போட்டியில் மைக்கேல் பெல்ப்ஸ், ரியான் ஹெல்டு, நாதன் அட்ரியன், டிரசல் ஆகியோர் அடங்கிய அமெரிக்க அணி, பந்தய தூரத்தை 3 நிமிடம் 09.92 விநாடியில் கடந்து முதலிடம் பிடித்து தங்கம் வென்றது. இதன்மூலம் ஒலிம்பிக் அரங்கில் மைக்கேல் பெல்ப்ஸ் 19-வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

2-வது இடத்தை பிரான்ஸ் அணியும் (3 நிமிடம், 10.53 விநாடி), 3-வது இடத்தை ஆஸ்திரேலிய அணியும் (3 நிமிடம், 11.37 விநாடி) பிடித்து முறையே வெள்ளி, வெண்கலப் பதக்கம் கைப்பற்றின.

2012 லண்டன் ஒலிம்பிக்குக்குப் பிறகு ஓய்வு பெறுவதாக அறிவித்த பெல்ப்ஸ் 2014-ம் ஆண்டு ஓய்வு முடிவை திரும்பப் பெற்று மீண்டும் சர்வதேச நீச்சல் போட்டியில் களமிறங் கினார். ஆனால் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கைது செய்யப்பட்ட பெல்ப்ஸுக்கு 6 மாதம் நீச்சல் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. தடை காலத்தை நிறைவு செய்த பிறகு மீண்டும் உச்சக் கட்ட பார்முக்கு திரும்பினார்.

இந்நிலையில் ரியோ ஒலிம்பிக்கில் தற்போது தங்க வேட்டையை தொடங்கியுள்ளார். தொடர் நீச்சலில் இரண்டாவது வரிசையில் இருந்த பெல்ப்ஸ், தனது போட்டியைத் தொடங்கிய போது அமெரிக்கா 2-வது இடத் தில் இருந்தது. பிரான்ஸ் முன்னணி யில் இருந்தது. ஆனால் 47.12 நொடிகளில் தனது தூரத்தைக் கடந்து அமெரிக்கா முன்னிலை பெற உதவினார். இதனால் இறுதி யில் அமெரிக்க அணியால் சுலபமாக முதல் இடம் பிடிக்க முடிந்தது.

ஐந்தாவது முறையாக ஒலிம் பிக்கில் பங்கேற்றுள்ள பெல்ப்ஸ் இதுவரை 19 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 23 பதக்கங்கள் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடவருக்கான 100 மீட்டர் பிரஸ்ட் ஸ்டிரோக் பிரிவு நீச்சல் இறுதிப்போட்டியில் பந்தய தூரத்தை 57.13 விநாடியில் கடந்து இங்கிலாந்தின் ஆடம் பியாட்டி தங்கப் பதக்கம் வென்றார்.

இதன்மூலம் பியாட்டி தனது சொந்த சாதனையை முறியடித்து புதிய உலக மற்றும் ஒலிம்பிக் சாதனை படைத்தார். இதற்கு முன் இவர் ரியோ ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் பந்தய தூரத்தை 57.55 விநாடியில் கடந்தது உலக மற்றும் ஒலிம்பிக் சாதனையாக இருந்தது.

இங்கிலாந்து வீரர் ஒருவர் ஒலிம்பிக் போட்டியில் 28 வருடங்களுக்கு பிறகு தங்கப் பதக்கத்தை தற்போதுதான் வென்றுள்ளார். கடைசியாக 1988 சியோல் ஒலிம்பிக்கில் இங்கிலாந்து வீரர் அட்ரியன் மூர்ஹவுஸ் தங்கம் வென்றிருந்தார்.

லெடக்கி சாதனை

மகளிருக்கான 400 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவு நீச்சல் இறுதி போட்டியில் அமெரிக்காவின் லெடக்கி பந்தய தூரத்தை 3 நிமிடம் 56.46 விநாடியில் கடந்து முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இவர் புதிய ஒலிம்பிக் மற்றும் உலக சாதனை படைத்தார்.

கடந்த 2014ல் நடந்த பான் பசிபிக் சாம்பியன்ஷிப் போட்டியில் லெடக்கி, இந்த இலக்கை 3 நிமிடம் 58.37 விநாடியில் கடந்ததே உலக சாதனையாக இருந்தது. ரியோவில் லெடக்கி வென்ற 2-வது பதக்கம் இதுவாகும். 4X100 மீட்டர் பிரீஸ்டைல் ரிலே பிரிவில் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

சாரா ஜோஸ்டோம்

மகளிருக்கான 100 மீட்டர் பட்டர்பிளை நீச்சலில் சுவீடன் வீராங்கனை சாரா ஜோஸ்டோம் 55.48 விநாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய உலக சாதனை மற்றும் ஒலிம்பிக் சாதனை படைத்து தங்கம் வென்றார்.

கனடாவை சேர்ந்த பென்னி ஒலிஸ்கா 56.46 விநாடியில் கடந்து வெள்ளிப் பதக்கமும், அமெரிக்காவை சேர்ந்த டானா ஹேல்மர் 56.63 விநாடியில் கடந்து வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in