Published : 26 Feb 2014 09:33 PM
Last Updated : 26 Feb 2014 09:33 PM

கோலி, ரஹானே அபாரம்: வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை தோற்கடித்தது. இதன்மூலம் இந்த ஆண்டில் முதல் வெற்றியை ருசித்தது இந்தியா.

வங்கதேச கேப்டன் ரஹிம் சதமடித்து தனது அணி வலுவான ஸ்கோரை எட்ட உதவினர். அதற்குப் பதிலடியாக ஆடிய இந்திய கேப்டன் கோலி சதமடித்து தனது அணிக்கு வெற்றி தேடித்தந்தார்.

வங்கதேசத்தின் பதுல்லா நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணியில் அம்பட்டி ராயுடு சேர்க்கப்பட்டதால் சேதேஷ்வர் புஜாராவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி பீல்டிங்கை தேர்வு செய்ய, அனாமுல் ஹக், சம்சுர் ரஹ்மான் ஆகியோர் வங்கதேசத்தின் இன்னிங்ஸைத் தொடங்கினர்.

வருண் ஆரோன் வீசிய 6-வது ஓவரின் முதல் பந்தில் சம்சுர் ரஹ்மான் 7 ரன்களில் ஸ்டெம்பை பறிகொடுக்க, பின்னர் வந்த மோமினுல் ஹக் 23 ரன்களில் வெளியேறினார். அப்போது 12.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்திருந்தது வங்கதேசம்.

3-வது விக்கெட்டுக்கு 133

இதையடுத்து அனாமுல் ஹக்குடன் இணைந்தார் கேப்டன் முஷ்பிகுர் ரஹிம். இந்த ஜோடி சிறப்பாக விளையாட அஸ்வின் வீசிய ஆட்டத்தின் 23-வது ஓவரில் 100 ரன்களைக் கடந்தது வங்கதேசம். அதே ஓவரில் சிக்ஸர் அடித்து அரைசதம் கண்டார் அனாமுல் ஹக். அவர் 67 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் அரைசதத்தை எட்டினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய முஷ்பிகுர் ரஹிம் கோலி வீசிய 33-வது ஓவரில் அரைசதம் (65 பந்துகளில்) கண்டார்.

இதன்பிறகு சற்று வேகம் காட்டிய அனாமுல் ஹக், வருண் ஆரோன் வீசிய ஆட்டத்தின் 37-வது ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசிய கையோடு ஆட்டமிழந்தார். அவர் 106 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 24.5 ஓவர்களில் 133 ரன்கள் குவித்தது.

ரஹிம் சதம்

பின்னர் வந்த நயீம் இஸ்லாம் 14 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து சிறப்பாக ஆடிய முஷ்பிகுர் ரஹிம் 104 பந்துகளில் சதமடித்தார். இது அவருடைய 2-வது சதமாகும். முதல் சதமடித்து இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு 2-வது சதத்தை அடித்துள்ளார் ரஹிம். அவர் 113 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அந்த அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 279 ரன்கள் குவித்தது.

கோலி சதம்

280 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியில் ஷிகர் தவண்-ரோஹித் சர்மா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 11.2 ஓவர்களில் 50 ரன்கள் சேர்த்தது. வங்கதேசத்தின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிய தவண் 44 பந்துகளில் 28 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரைத் தொடர்ந்து ரோஹித் சர்மா 21 ரன்களில் வெளியேற, கேப்டன் கோலியும் அஜிங்க்ய ரஹானேவும் ஜோடி சேர்ந்தனர்.

இந்த ஜோடி மேலும் விக்கெட் எதுவும் விழாமல் பார்த்துக் கொண்டது. ரஹானே ஒருபுறம் நிதானமாக ஆட, மறுமுனையில் கேப்டன் கோலி தனக்கே உரிய பாணியில் அதிரடியில் இறங்கினார். தொடர்ந்து பவுண்டரிகளை விரட்டிய கோலி 48 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் அரைசதத்தை எட்டினார். இதனால் 31 ஓவர்களில் 150 ரன்களைக் கடந்த இந்தியா, அடுத்த 6 ஓவர்களில் 200 ரன்களை எட்டியது.

தொடர்ந்து வேகம் காட்டிய கேப்டன் கோலி 95 பந்துகளில் 1 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் சதத்தை எட்டினார். இது ஒருநாள் போட்டியில் அவர் அடித்த 19-வது சதமாகும். இதன்பிறகு ரஹானே 64 பந்துகளில் அரைசதம் கண்டார். ஒருநாள் போட்டியில் அவர் அடித்த 4-வது அரைசதம் இது.

3-வது விக்கெட்டுக்கு 213

இந்தியா 267 ரன்களை எட்டியபோது கோலி ஆட்டமிழந்தார். 122 பந்துகளைச் சந்தித்த அவர் 2 சிக்ஸர், 16 பவுண்டரிகளுடன் 136 ரன்கள் குவித்து ரூபெல் ஹுசைன் பந்துவீச்சில் போல்டு ஆனார். கோலி-ரஹானே ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 213 ரன்கள் குவித்தது. இதன்பிறகு ரஹானே 83 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் இந்தியா 49 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

கோலி சதமும், வெற்றியும்…

இந்தப் போட்டியில் 19-வது சதமடித்த கோலி, இந்திய அணியின் கேப்டனாக 3-வது சதத்தைப் பூர்த்தி செய்துள்ளார். இந்த ஆண்டில் 2-வது சதமடித்ததோடு, வங்க தேசத்துக்கு எதிராக 3-வது சதத்தைப் பதிவு செய்தார். இந்திய அணியின் 2-வது பேட்டிங்கின்போது அவர் அடித்த 13-வது சதம் இது. இந்தப் போட்டியோடு சேர்த்து அவர் சதமடித்த 17 போட்டிகளில் இந்தியா வெற்றி கண்டுள்ளது.

ரஹிமை பதம்பார்த்த ஆரோன்

வருண் ஆரோன் வீசிய 39-வது ஓவரில் முஷ்பிகுமார் ரஹிம் இரண்டு பவுண்டரிகளையும், ஒரு சிக்ஸரையும் விளாசினார். இதையடுத்து ஆரோன் ஆக்ரோஷமாக பந்துவீச புல்டாஸாக சென்ற் பந்து ரஹிமின் இடது விலா எலும்பு பகுதியில் தாக்கியது. வலியால் துடித்த ரஹிம் தரையில் விழுந்தார். ஆரோன் தொடர்ந்து 2-வது முறையாக புல்டாஸ் வீசியிருந்ததால் அதோடு அவருக்கு பந்துவீச தடை விதிக்கப்பட்டது. இதனால் அந்த ஓவரின் கடைசிப் பந்தை கோலி வீசினார். ஆரோன் ஆக்ரோஷமாக பந்துவீசியபோதும் 7.5 ஓவர்களில் 74 ரன்களை வாரி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x