

கோபா அமெரிக்க கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியனான சிலி, அர்ஜென்டினாவை எதிர்த்து விளையாடுகிறது.
கடந்த 2014-ல் பிரேசிலில் நடைபெற்ற உலகக்கோப்பையில் அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டியில் ஜெர்மனியிடம் தோல்வியடைந்து கோப்பையை இழந்தது. அதேபோல் கடந்த ஆண்டு நடைபெற்ற கோபா அமெரிக்க கோப்பையை சிலியிடம் இழந்தது.
இரண்டு வருடத்தில் மிக முக்கி யான இரு சாம்பியன் பட்டத்தை நழுவவிட்ட அர்ஜென்டினா இந்த முறை கோபா அமெரிக்கா தொடரில் பட்டம் வென்றே தீர வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது.
தொடரின் ஆரம்பத்தில் இருந்தே அந்த அணி மிகச்சிறப் பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஒரு ஆட்டத்தில் கூட தோல்வியை சந்திக்காமல் இறுதிப்போட்டியில் கால்பதித்துள்ளது. நட்சத்திர வீரர் லலோயனல் மெஸ்ஸி நல்ல பார்மில் உள்ளார்.
அணிக்கு கோப்பையை வென்று கொடுப்பதில் அவர் முனைப்புடன் உள்ளார். சர்வதேச போட்டிகளில் அர்ஜென்டினா அணிக்காக பெரிய அளவில் சாதித்ததில்லை என்ற தன் மீதான விமர்சனத்துக்கு இம்முறை நிச்சயம் அவர் முற்றுப்புள்ளி வைக்கக்கூடும் என்றே கருதப்படுகிறது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து 23 ஆண்டுகளுக்கு பிறகு மகுடம் சூடும் அர்ஜென்டினாவின் கனவு நிறைவேறுமா என்பது திங்கள் கிழமை தெரிந்துவிடும். இந்நிலை யில் இம்முறை கோபா அமெரிக்கா தொடரில் கோப்பையை வெல்லாமல் அர்ஜென்டினா அணி வீரர்கள் நாட்டிற்குள் வரக்கூடாது என்று கால்பந்து ஜாம்பவான் மரடோனா கூறியுள்ளார்.
இதுகுறித்து மரடோனா கூறும்போது ‘‘நாங்கள் உறுதி யாக கோப்பையை வெல்வோம். ஒருவேளை இறுதிப்போட்டியில் வெற்றி பெறாவிட்டால் அர்ஜென் டினா வீரர்கள் நாடு திரும்பக்கூடாது" என்றார்.