

நியூசவுத்வேல்ஸ் கிரிக்கெட் சீசன் முடிந்ததையடுத்து நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் ‘முறையற்ற விதத்தில் கருத்து’ தெரிவித்ததாக குற்றம்சாட்டப்பட்டு ஆஸ்திரேலிய இடது கை ஸ்பின்னர் ஓகீஃபுக்கு 20,000 ஆஸ்திரேலிய டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டதோடு உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் புனே டெஸ்ட் போட்டியில் அபாரமாக வீசி ஆஸ்திரேலிய அணியை ஒரு அரிய வெற்றிக்கு இட்டுச் சென்றவர் ஓகீஃப்.
நியூசவுத்வேல்ஸின் வெற்றியைக் கொண்டாடும் நிகழ்ச்சி ஓகீஃபின் மதுபோதை கருத்தினால் கடும் சிக்கலுக்குள்ளானது.
கடந்த 12 மாதங்களில் ஓகீஃப் 2-வது முறையாக குடித்து விட்டு முறைகேடாக நடந்து கொண்ட சம்பவத்தினால் அபராதம் சற்று வலுவாக விதிக்கப்பட்டதோடு இந்த ஆண்டு நடைபெறும் உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடர் முழுதும் இவர் விளையாடத் தடை விதித்து கடும் நடவடிக்கை மேற்கொண்டது கிரிக்கெட் ஆஸ்திரேலியா.
முதல் முறை மேன்லி மதுபான பாரில் இவர் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது, ஆனால் அவர் மீறி உள்ளே நுழைய முற்பட்டு தடுக்கப்பட்டார், இதனையடுத்து நியூசவுத்வேல்ஸ் போலீஸ் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இம்முறை கிளப் விருது நிகழ்ச்சியிலேயே குடித்து விட்டு முறையற்ற விதத்தில் சில கருத்துகளை அவர் தெரிவித்ததாக அபராதம் மற்றும் தடையை சந்தித்துள்ளார்.
இவரது நடத்தை குறித்து ஆஸ்திரேலியா உயர் திறன் மேலாலர் பாட் ஹோவர்ட் கூறும்போது, “ஆஸ்திரேலிய கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஏற்க முடியாத நடத்தையை அனுமதிக்க முடியாது. இதைப்பொறுத்தவரை நாங்கள் பொறுத்துக் கொள்ள முடியாத அணுகுமுறையைத் தொடர்வோம்.
இத்தகைய சூழல் ஏற்பட்டது குறித்து நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம். அவரது இத்தகைய நடவடிக்கைகள் அவர் இந்தியாவில் ஆடிய அபார ஆட்டத்தையும் மறைத்து மூடிவிடுகிறது” என்றார்.
ஆனால் ஸ்டீவ் ஓகீஃப் அப்படி என்ன கூறினார் என்பது குறித்து வாயைத் திறக்கவில்லை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மற்றும் நியூசவுத்வேல்ஸ் கிரிக்கெட் சங்கம். ஆனால் பெண் கிரிக்கெட் வீராங்கனை குறித்து மோசமான கருத்தை தெரிவித்ததாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஊடகம் கூறுகிறது. ஆனால் அதிகாரபூர்வமாக அவர் என்ன கூறினார் என்பது பற்றிய தகவல்கள் இல்லை.
ஸ்டீவன் ஓகீஃபும், “குடிபோதையில் மிகவும் முறையற்ற கருத்துகளை தெரிவித்தேன், இதற்கு மன்னிப்பே கிடையாது, ஆனால் நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன். எனக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது அதனை வார்த்தைகள் மூலம் எதிர்கொள்வதை விட செயல் மூலம் எதிர்கொள்ள விழைகிறேன்” என்றார்.