ராஜினாமாவை வாபஸ் பெற்றார் ஹாக்கி பயிற்சியாளர் டெரி வால்ஷ்

ராஜினாமாவை வாபஸ் பெற்றார் ஹாக்கி பயிற்சியாளர் டெரி வால்ஷ்
Updated on
1 min read

இந்திய ஹாக்கியை நல்ல நிலைக்குக் கொண்டு வருவதில் தீவிர முனைப்பு காட்டி வரும் பயிற்சியாளர் டெரி வால்ஷ் தனது திடீர் ராஜினாமாவை இன்று வாபஸ் பெற்றார்.

இதனால் அவர் ஆடவர் ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளராகத் தொடர்கிறார்.

இவரது ராஜினாமாவைத் தொடர்ந்து விளையாட்டுத் துறை அமைச்சகம் இந்திய விளையாட்டு ஆணையத்திடம் விளக்கம் கேட்டிருந்தது. இந்நிலையில் விளையாட்டு ஆணையம், விளையாட்டுத்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் பயிற்சியாளர் டெரி வால்ஷ் ஆகியோரிடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது.

டெரி வால்ஷ் ராஜினாமாவை வாபஸ் பெற்றதை அறிவித்த விளையாட்டுத் துறை அமைச்சர், சர்பாநந்தா சோனோவால், “நான் மகிழ்ச்சியடைகிறேன், இந்திய விளையாட்டு ஆணையம் இதற்காக மேற்கொண்ட முயற்சிகள் வரவேற்கத்தக்கது. இதன் மூலம் இந்திய ஹாக்கியின் ஒளிமயமான எதிர்காலத்தை எதிர்நோக்குகிறேன்” என்று ட்வீட் செய்துள்ளார்.

மேலும், "டெரி வால்ஷ் ராஜினாமாவை நாங்கள் ஏற்கவேயில்லை, பின் எப்படி வாபஸ் பெற்றதாகும், இன்று நாங்கள் அவருடன் நடத்திய பேச்சுவார்த்தை பலனளித்தது, அவர் எழுப்பிய பிரச்சினைகள் எளிதில் தீர்வு காணக்கூடியதே. நவம்பர் 19ஆம் தேதி அவரது இப்போதைய ஒப்பந்தம் முடிவடைதற்குள் அவர் எழுப்பிய பிரச்சினைகள் தீர்க்கப்படும். அவருக்கு புதிய ஒப்பந்தம் அளிக்கவுள்ளோம், அதில் அவரது பிரச்சினைகளுக்கு தீர்வு நிச்சயம் உண்டு” என்று இந்திய விளையாட்டுத் துறை ஆணைய தலைவர் தாம்சன் தெரிவித்தார்.

ஊதிய பிரச்சினையால் வால்ஷ் ராஜினாமா செய்ததாக ஹாக்கி இந்தியா ஊதிவிட, இந்திய விளையாட்டு ஆணையம் அதனை மறுத்துள்ளது. டெரி வால்ஷ் எந்த ஒரு சம்பளப் பிரச்சினைகளையும் எழுப்பவில்லை என்று எஸ்.ஏ.ஐ. ஆணித்தரமாக கூறியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in