

தேசிய அளவிலான சர்பிங் போட்டியை சர்பிங் பெடரேஷன் ஆப் இந்தியா எனும் அமைப்பு சென்னை கோவளத்தில் ஞாயிறன்று நடத்தியது. டி.டி.லாஜிஸ்டிக்ஸ் எனும் அமைப்பை சேர்ந்த அருண்வாசு எர்த் சிங் அமைப்பின் யோத்தம், ஒருங்கிணைப்பாளர் கிஷோர்குமார், ஆகியோர் இந்த போட்டியை நடத்தினர். அந்த போட்டிக்கு மூத்த கிரிக்கெட் பயிற்சியாளரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஜான்டி ரோட்ஸ் வருகை தந்திருந்தார்.அவர் “தி இந்து”விற்கு அளித்த பிரத்யேக பேட்டி:
சர்பிங் ஆர்வம்
எனது சொந்த ஊர் கேப் டவுன்.அது மலைகாட்டிற்கும் கடலுக்கும் நடுவில் உள்ளது. காட்டிலும் கடலிலும் பல சாகசங்களை முயன்றுள்ளேன். சர்பிங் கடினமாக இருந்தாலும் மிகவும் பிடித்திருக்கிறது. பத்தாண்டுகளாக சர்பிங் செய்து வருகிறேன். நான் 70 வயது வரையாவது சர்ப் செய்வேன்.
இந்திய சர்பிங் அனுபவம்
இந்தியாவில் சர்பிங் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளேன். முதலில் விசாகப்பட்டினத்தில் சர்ப் செய்தேன். இப்போது கோவளத்திற்கு வந்துள்ளேன். நான் விசாகப்பட்டினத்தில் பார்த்த ஒரு சிலர் இங்கும் போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் முன்னேற்றத்தை காண மகிழ்ச்சியாக உள்ளது.
வளரும் சர்பிங்
இந்தியாவில் மிக நீளமான கடற்கரை உள்ளது. பாலி, இந்தோனேஷியா நாடுகளில் சர்பிங் பிரபலமாக உள்ளது.அவை சர்வதேச சுற்றுலா தலங்களாக உள்ளன. அது போல இந்தியாவும் சிறந்த கடலோர சுற்றுலா தலமாக மாறக் கூடும். தற்போதுள்ள சுற்றுலா பயணிகள் இரண்டு நாட்கள் தங்கினாலும் மக்களையும் அவர்கள் கலாச்சாரத்தையும் அறிய அவர்களுடன் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என விரும்புகின்றனர்.
மக்களுடைய மாறிவரும் வாழ்க்கை முறை இந்த விளையாட்டு வளர காரணமாக இருக்கும். இந்தியாவில் சர்பிங் ஆரம்ப நிலையில் உள்ளது. இந்திய மக்கள் தொகையில் 5% பேர் சர்பிங் செய்தால் கூட இது பெரிய விளையாட்டாக உருவாகும்.
பெரும் வரவேற்பும் கிடைக்கும். கடல் எப்போதும் அமைதியாக இருக்காது. நிறைய ஆபத்துகளும் உள்ளன. தண்ணீர் பயம் நீங்கியிருந்தால் தான் சர்பிங் சுலபமாக செய்ய முடியும்.
சர்பர்களாகும் மீனவர்கள்
இங்குள்ள மீனவக் குழந்தை களை பார்த்தீர்களா? மிகத் திறமையாக சர்பிங் செய்கிறார்கள். அவர்களுக்கு கடல் மிகவும் பழக்கமான இடம். தண்ணீர் பயமற்றவர்கள்.
சர்பிங்கை மிகவும் ரசித்து கற்றுக் கொண்டு விளையாடி வருகிறார்கள். இந்த விளையாட்டிற்கு இந்தியாவில் நிச்சயம் நல்ல எதிர்காலம் உள்ளது.விளையாடி முடித்த பின் உங்களுக்கு புத்துணர்ச்சி கிடைத்தது போல் இருக்கும். என்று கூறி சிரிக்கிறார் ரோட்ஸ்.
மதிக்கக் கற்றல்
இங்கிருக்கும் சர்பிங் பள்ளியில் குழந்தைகள் விளையாட்டை மட்டும் கற்றுக் கொள்வதில்லை. கடலையும் சுற்றுச்சூழலையும் மதிக்கக் கற்றுக் கொள்கிறார்கள். கடலோரங்களை சுத்தம் செய்தல் போன்ற பல பொறுப்பான காரியங்களில் குழந்தைகள் இறங்கியுள்ளனர். இந்த விளையாட்டின் ஒவ்வொரு பாடத்தை கற்றுக் கொள்ள அவர்கள் மிக கடுமையாக உழைக்க வேண்டும். எனவே அவர்கள் பொறுப்பானவர்களாக மாறுகிறார்கள். சுற்றுச்சூழலோடு தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள இது ஒரு வாய்ப்பு என்றும் அவர் தெரிவித்தார்.
இங்குள்ள மீனவக் குழந்தைகளை பார்த்தீர்களா? மிகத் திறமையாக சர்பிங் செய்கிறார்கள். அவர்களுக்கு கடல் மிகவும் பழக்கமான இடம். தண்ணீர் பயமற்றவர்கள். சர்பிங்கை மிகவும் ரசித்து கற்றுக் கொண்டு விளையாடி வருகிறார்கள்.