Last Updated : 05 Jul, 2016 02:43 PM

 

Published : 05 Jul 2016 02:43 PM
Last Updated : 05 Jul 2016 02:43 PM

வெளிநாடுகளிலும் வெல்வதே இலக்கு: பயிற்சியாளர் கும்ப்ளே கருத்து

இந்திய அணியை தொடர்ச்சியாக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அதுவும் வெளிநாடுகளில் விளையாடும் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பது எனது இலக்கு என்று தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

மேற்கு இந்திய தீவுகளில் சுற்றுப் பயணம் செய்து இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில் அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே நேற்று ட்விட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து கூறியதாவது:

மேற்கு இந்திய தீவுகள் தொடருக்கு பிறகு உள்நாட்டில்தான் அதிக டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன. எனவே இந்த தொடரை வெற்றியோடு ஆரம்பித்து வெளிநாட்டில் இந்திய அணி சாதித்தது என்ற பெயரை நிறுவ முயலுவோம். இப்போதுள்ள இந்திய அணியும், சவாலுக்கு தயாராக உள்ளது.

8 வருடங்களுக்கு பிறகு இந்திய அணியின் தொப்பியோடு வீரர்களின் அறைக்கு செல்வது மிகவும் மகிழ்ச்சியான அனுபவ மாக உள்ளது. பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டித் தொடரை நடத்துவதால் ரசிகர்களை ஈர்க்க முடியும் என்றால் அதை செய்வதில் தவறு இல்லை.

பிங்க் பந்து பற்றி இப்போதைக்கு நான் நினைக்கவில்லை. அதற்கு நீண்ட காலம் உள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் சிவப்பு நிற டியூக்ஸ் பந்தில் தான் விளையாட உள்ளோம். இந்த பந்தை கொண்டு தான் கடந்த 6 நாட்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளோம். ஒரு நேரத்தில் ஒரு போட்டியை பற்றியே சிந்திப்போம்.

ஜடேஜா மிகச்சிறந்த ஆல் ரவுண்டர். அவருடன் ஆலோசனை நடத்தினேன். ஜடேஜாவின் பந்து வீச்சு மேற்கிந்தியத் தீவுகளின் ஆடுகளங்களுக்கு சரியாக பொருந்தும் என கருதுகிறேன். பந்து வீச்சில் மட்டும் அல்லாமல் பேட்டிங்கில் அவர் ரன்கள் குவிப்பார் என நான் எதிர்பார்க்கிறேன்.

விராட் கோலியை ஜூனியர் கிரிக்கெட் வீரராக இருந்த காலம் முதலே எனக்கு தெரியும். கடந்த இரு வருடங்களில் சிறந்த வீரராகவும், கேப்டனாகவும் பரிணாமம் காட்டி வருகிறார். நானும் மைதானத்தில் ஆக்ரோஷ மாகவே செயல்பட்டேன். விராட் கோலியும் அதைப்போலவே உள்ளார். அவரோடு இணைந்து செயலாற்றுவது மகிழ்ச்சியளிக் கிறது.

இவ்வாறு கும்ப்ளே தெரிவித்தார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் 21-ம் தேதி தொடங்குகிறது. இதற்கு முன்ன தாக இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்திலும், மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத் திலும் இந்தியா விளையாடுகிறது.

முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவை எதிர்த்து மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் பிரசிடென்ட்ஸ் லெவன் அணி விளையாடுகிறது. இந்த அணிக்காக வீரர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். லியோன் ஜான்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதுவரை நான்கு டெஸ்ட் போட்டிகளில விளையாடி 275 ரன்கள் சேர்த்துள்ளார்.

பிரசிடென்ட்ஸ் லெவன் அணி விவரம்:

லியோன் ஜான்சன் (கேப்டன்), ஜெர்மைன் பிளாக்வுட், ராஜேந்திர சந்த்ரிகா, ரோஸ்டோன் சேஸ், ஜேசன் டேவ்ஸ், ஷேன் டவ்ரிச், ஷாய் ஹோப், மேமியன் ஜேக்கப்ஸ், கியோன் ஜோசப், மின்ட்லே, விஷாயுல் சிங், ஜோமெல் வாரிகன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x