

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இன்று லண்டனில் மோதுகின்றன.
6 வார கால ஐபிஎல் டி20 தொடரில் பங்கேற்ற இந்திய அணி வீரர்களுக்கு இந்த 50 ஓவர் பயிற்சி ஆட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்திய அணி கடைசியாக கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிராக சர்வதேச ஒருநாள் போட்டியில் பங்கேற்றிருந்தது.
இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டம் அதிகாரப்பூர்வமற்றது என் பதால் அணியில் உள்ள 15 வீரர் களுக்கும் விளையாட வாய்ப்பு கிடைக்கும். அஸ்வின் மீது அனை வரது பார்வையும் உள்ளது. உள்நாட்டு சீசனில் தொடர்ச்சியாக 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதால் பணிச்சுமை மற்றும் காயம் காரணமாக அவரை ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டாம் என பிசிசிஐ அறிவுறுத்தியிருந்தது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க வாய்ப்பு குறைவுதான். வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் திறன் வாய்ந்த ஒரு சுழற்பந்து வீச்சாளரை மட்டுமே பயன்படுத்த இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்தால் அஸ்வினுக்கு சற்று சிக்கல்தான்.
இந்த சூழ்நிலையில் ரவீந்திர ஜடேஜாவும் அணியில் இடம் பெற மல்லுக்கட்டுவார். இதனால் இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டம் அஸ்வினுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. பயிற்சி ஆட்டம் நடைபெறும் லண்டன் ஓவல் மைதானத்தில் தாராளமாக 300 ரன்கள் வரை குவிக்க முடியும்.
இதனால் நியூஸிலாந்து அணி யின் முன்னணி பேட்ஸ்மேன்களான வில்லியம்சன், மார்ட்டின் கப்தில், டாம் லதாம் ஆகியோருக்கு எதிராக அஸ்வின் தனது திறனை சோதித்துக் கொள்ள நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
வெள்ளை நிற பந்தில் விளையாடப்படும் ஒருநாள் போட்டி களில் அஸ்வின் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியதில்லை. 105 ஆட்டங்களில் விளையாடி உள்ள அவர் 145 விக்கெட்கள் மட்டுமே கைப்பற்றி உள்ளார். அதிலும் வெளிநாட்டு மைதானங் களில் 39 ஆட்டங்களில் 37 விக்கெட்களே வீழ்த்தி உள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக் காக இந்தியாவில் இருந்து புறப்படும் போது, இந்த தொடரில் புதிய உத்திகளை கையாளப் போவதாக அஸ்வின் தெரிவித் திருந்தார். இந்த உத்திகளை அவர் பயிற்சி ஆட்டத்தில் சோதித்து பார்க்கக்கூடும். இதற்கு பலன் கிடைத்தால் சுழலில் அஸ்வின் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி மீதும் எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை அரை இறுதி ஆட்டத்துக்கு பிறகு ஷமி இதுவரை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் களமிறங்கவில்லை.
தற்போது உடல் தகுதியுடன் உள்ள ஷமி, சீரான வேகத்துடன் பந்தை ஸ்விங் செய்வதிலும் ‘பிளாக் ஹோல்’ (யார்க்கர் போன்ற வகை யிலான பந்து வீச்சு) பந்துகளை சிறப்பாக கையாள்வதிலும் திறன் கொண்டவர். பயிற்சி ஆட்டத்தில் அவர் அசத்தும் பட்சத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோருடன் விளையாடும் லெவனில் இடம்பெறக்கூடும்.
பேட்டிங்கில் ரோஹித் சர்மா, 8 மாதங்களுக்கு பிறகு சர்வதேச போட்டியில் களமிறங்க உள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரின் போது தொடை பகுதியில் காயம் அடைந்த அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
அதன் பின்னர் கடந்த இரண்டரை மாதங்களுக்கு பின்னர் உள்ளூர் ஒருநாள் போட்டி தொடரான விஜய் ஹசாரே கோப்பையில் விளையாடினார். ஒரு சில ஆட்டத்தில் மட்டுமே விளையாடிய அவர் பெரிய அளவில் ரன்கள் சேர்க்கவில்லை. இதை தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடினார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மாறுபட்ட இந்த தொடரில் ரோஹித் சர்மா, மும்பை அணிக்காக 4-வது வீரராகவே களமிறங்கினார். தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கும் அவர் மனதளவில் தன்னை தயார் செய்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார்.
காயம் காரணமாக கே.எல்.ராகுல் இடம் பெறாததால் அந்த வாய்ப்பை அதிர்ஷ்டவசமாக பெற் றுள்ள ஷிகர் தவணுக்கு இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்த தாக உள்ளது. இந்த தொடர் அவரது எதிர்கால கிரிக்கெட்டை நிர்ணயிப்பதாக அமையக்கூடும்.
2013-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பட்டம் வென்றபோது ஷிகர் தவண் சிறந்த பேட்ஸ்மேனாக தேர்வாகி இருந்தார். ஐபிஎல் தொடரிலும் அவர் சிறப்பாக ரன் சேர்த்துள்ளதால் குறுகிய வடிவிலான போட்டிகளில் இந்திய அணியில் தனது இடத்தை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் மீண்டும் ஒருமுறை சிறப்பான ஆட்டத்தை ஷிகர் தவண் வெளிப்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியூஸிலாந்தின் வேகக் கூட்டணி யான மிட்செல் மெக்லீனகன், டிம் சவுத்தி, டிரென்ட் போல்ட் ஆகியோர் இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு சவால் கொடுக்க தயாராக உள்ளனர். இவர்களுக்கு எதிராக கேப்டன் விராட் கோலி, சிறப்பாக விளையாடும் பட்சத்தில் மீண்டும் சிறந்த பார்முக்கு திரும்புவார்.
மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக வரும் 4-ம் தேதி நடை பெறும் ஆட்டத்துக்கு முன்பாக நடுகள வீரர்களான யுவராஜ் சிங், தோனி, கேதார் ஜாதவ் ஆகியோரும் பார்முக்கு திரும்பி தன்னம்பிக்கையை பெறுவது அவசியமாகும்.
அணிகள் விவரம்:
இந்தியா:
விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவண், ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே, யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா.
நியூஸிலாந்து:
வில்லியம்சன் (கேப்டன்), மார்ட்டின் கப்தில், ஜிம்மி நீஷாம், ராஸ் டெய்லர், ஜீத்தன் படேல், கோரே ஆண்டர்சன், டாம் லதாம், லூக் ரான்ஜி, டிரென்ட் போல்ட், மிட்செல் மெக்லீனகன், மிட்செல் சான்ட்னர், நீல் புரூம், ஆடம் மில்னே, டிம் சவுத்தி, காலின் டி கிராண்ட் ஹோம்.
இடம்: லண்டன்
நேரம்: பிற்பகல் 3
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்