மார்க் உட், அடில் ரஷீத் அபாரப் பந்துவீச்சு: ஆஸ்திரேலியா 277 ரன்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது

மார்க் உட், அடில் ரஷீத் அபாரப் பந்துவீச்சு: ஆஸ்திரேலியா 277 ரன்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது
Updated on
2 min read

எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் வெற்றி பெற்றேயாக வேண்டிய சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்துள்ளது.

டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் ஆஸ்திரேலியாவை பேட் செய்ய அழைத்தது.

ஒருநேரத்தில் 320-330 ரன்களைக் குறிவைத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் ஸ்மித்தை 56 ரன்களில் மார்க் உட்டிடம் இழக்க, பின்நடுவரிசை வீரர்களை லெக் ஸ்பின்னர் அடில் ரஷீத் சொற்ப ரன்களில் வீழ்த்த ஆஸ்திரேலிய அணி 277 ரன்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அடில் ரஷீத் 10 ஓவர்கள் 1 மெய்டன் 41 ரன்கள் 4 விக்கெட்டுகள் என்று அசத்த, வேகப்பந்து வீச்சாளர் மார்க் உட், வார்னர், ஸ்மித், மேக்ஸ்வெல் கடைசியில் ஆடம் ஸாம்ப்பா ஆகியோரை வீழ்த்தி 10 ஓவர்கள் 1 மெய்டன் 33 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தொடக்கத்தில் அபாய வீரர் டேவிட் வார்னர் 25 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் என்று தனது ஷாட்களை நன்றாக ஆடத் தொடங்கிய நேரத்தில் மார்க் உட்டின் அருமையான பந்தில் விக்கெட் கீப்பர் பட்லரிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

ஏரோன் பிஞ்ச், கேப்டன் ஸ்மித் இணைந்தனர், 15.3 ஓவர்களில் இருவரும் இணைந்து 96 ரன்கள் என்று சற்றே வேகக்கூட்டணி அமைத்தனர். அப்போது 64 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் எடுத்த ஏரோன் பிஞ்ச் ஸ்டோக்ஸ் பந்தில் வெளியேறினார். மோய்சஸ் ஹென்றிக்ஸ் 3 பவுண்டரிகளுடன் நன்றாக ஆடி 19 பந்துகளில் 17 ரன்கள் எடுத்த நிலையில் அடில் ரஷீத்தின் முதல் விக்கெட்டாக பெவிலியன் திரும்பினார்.

அபாய ஸ்மித் 77 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்து பின்னால் ஷாட்களை ஆடலாம் என்று திட்டம் போட்ட தருணத்தில் மார்க் உட் பந்தை மிட் ஆஃபில் கேட்ச் கொடுத்து ஏமாற்றமளிக்க ஆஸ்திரேலியா 32.1 ஓவர்களில் 181/4 என்று ஆனது.

ஜேசன் ராயின் அற்புத கேட்ச்:

கிளென் மேக்ஸ்வெல் (20), டிராவிஸ் ஹெட் இணைந்து5-வது விக்கெட்டுக்காக 58 ரன்களை 10 ஓவர்களில் சேர்த்து ஆட்டத்தில் மந்தநிலையை உருவாக்கினர். அப்போது மேக்ஸ்வெல் மார்க் உட் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஷாட் ஆட பந்து சிக்சரை நோக்கிச் சென்றது, அப்போது தன் தலைக்கு மேல் சென்ற பந்தை ராய் பிடித்தார், அவரது கால்கள் எல்லைக்கோட்டுக்கு மில்லிமீட்டர் இடைவெளியில் இருந்தது, எல்லைக் கோட்டை கடந்து விடுவோம் என்று அறிந்த ராய் பந்தை உள்பக்கமாக சுண்டி விட்டு மீண்டும் உள்ளே வந்து பிடித்தார், மிக அற்புதமான கேட்ச். திருப்புமுனை கேட்சும் கூட. 20 ரன்களில் மேக்ஸ்வெல் வெளியேறினார்.

அதன் பிறகு 44-வது ஓவரில் மேத்யூ வேட் 2 ரன்களில் அடில் ரஷீத் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதே ஓவர் கடைசி பந்தில் ஸ்டார்க் வெளுத்து வாங்க வேண்டிய ;லெக் ஸ்டம்ப் புல்டாஸை மிக மோசமாக ஆடி அருகிலேயே ரூட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆண்டர்சன் கமின்சும் மிக மோசமான ஷாட்டில் அடில் ரஷீத்திடம் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். 239/4 என்ற நிலையிலிருந்து ஆஸ்திரேலியா 253/8 என்று ஆனது.

ஒரு முனையில் டிராவிஸ் ஹெட் அபாரமாக ஆடி வந்த நிலையில் அவருக்கு ஆதரவாக ஆட யாரும் இல்லை, ஆனால் அவர் கடைசியில் 64 பந்துகளில் 5 பவுண்டரிகல் 2 சிக்சர்களுடன் 71 ரன்களுடன் நாட் அவுட்டாக திகழ்ந்தார்.

கடைசி 10 ஓவர்களில் 57 ரன்களையே எடுத்த ஆஸ்திரேலியா இந்தக் காலக்கட்டத்தில் 5 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்களுக்குக் குறுக்கப்பட்டது.

இங்கிலாந்து வெற்றி பெற்றால் தன்னுடன் வங்கதேசத்தையும் அரையிறுதிக்கு அழைத்துச்செல்லும் இல்லை ஆஸ்திரேலியா வென்றால் இங்கிலாந்துடன் ஆஸி. அரையிறுதிக்குச் செல்லும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in