Published : 03 Jan 2017 09:40 AM
Last Updated : 03 Jan 2017 09:40 AM

சென்னை ஓபன் டென்னிஸ்: போர்னா கோரிச் அதிர்ச்சி தோல்வி; ராம்குமார், மைனேனி இன்று களமிறங்குகின்றனர்

தமிழக அரசின் ஆதரவுடன் 21-வது சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. தெற்காசியாவின் ஒரே ஏடிபி தொடரான இந்த போட்டி வரும் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது.

தொடக்க நாளான நேற்று ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தரவரிசையில் 82-வது இடத்தில் உள்ள பிரேசிலின் தியாகோ மான்டீரோ, 99-ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனில் மெத்வதேவை எதிர்த்து விளையாடினார். இதில் டேனில் மெத்வதேவ் 6-3, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

கடந்த ஆண்டு சென்னை ஓபனில் இறுதி போட்டி வரை முன்னேறியிருந்த குரேஷியாவின் முன்னணி வீரரான போர்னா கோரிச் தனது முதல் சுற்றில் தகுதி நிலை வீரரான தென் கொரியாவின் ஹியோன் சுங்குடன் மோதினார். இதில் 48-ம் நிலை வீரரான போர்னா கோரிச் 3-6, 5-7 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார். 104-வது இடத்தில் உள்ள ஹியோனிடம், போர்னா தோல்வியடைந்தது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது.

இதை தொடர்ந்து நடைபெற்ற ஆட்டங்களில் 86-ம் நிலை வீரரான பெல்ஜியத்தின் ஸ்டீவ் டார்சிஸ் 6-2, 6-3 என்ற நேர் செட்டில் தகுதி நிலை வீரரான குரோஷியாவின் நிக்கோலா மேக்டிக்கையும், 96-ம் நிலை வீரரான இஸ்ரேலின் டூடி செலா 6-2, 6-2 என்ற நேர் செட்டில் 77-ம் நிலை வீரரான போஸ்னியாவின் டமிர் தும்ஹுரையும் வீழ்த்தி 2-வது சுற்றில் நுழைந்தனர்.

ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெறும் ஆட்டங்களில் முன்னணி வீரர்கள் களமிறங்குகின்றனர். மாலை 5 மணிக்கு சென்டர் கோர்ட்டில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் தரவரிசையில் 70-வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் கார்சியா லோபஸ், 101-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அல்ஜாஸ் பெடனை சந்திக்கிறார்.

இதே நேரத்தில் கோர்ட் 1-ல் நடைபெறும் ஆட்டத்தில் 18 வயதான இளம் வீரரான நார்வேயின் காஸ்பர் ரூடு, 83-ம் நிலை வீரரான அர்ஜென்டினாவின் ரென்சோ ஆலிவோவுடன் மோதுகிறார். வைல்டு கார்டு மூலம் விளையாடும் காஸ்பர் தரவரிசையில் 225-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

வைல்டு கார்டு மூலம் பங்கேற்கும் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் தனது முதல் சுற்றில் சகநாட்டை சேர்ந்த வீரரான யூகி பாம்ப்ரியை எதிர்கொள்கிறார். கடந்த ஆண்டு கால் இறுதி வரை முன்னேறிய ராம்குமார் தரவரிசை பட்டியலில் 227-வது இடத்தில் உள்ளார்.

அதேவேளையில் தகுதி நிலை வீரரான யூகி பாம்ப்ரி 474-வது இடத்தில் உள்ளார். 2015-ல் தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் இருந்த அவர் காயம் காரணமாக பலமாதங்களாக விளையாடாத நிலையில் பின்னடைவை சந்திக்க நேரிட்டது. தற்போது இந்த சீசனை புத்துணர்ச்சியுடன் தொடங்க உள்ளார்.

போட்டி தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள பிரான்சின் முன்னணி வீரரான பெனோயிட் பேர் தனது முதல் சுற்றில் இன்று ரஷ்யாவின் கிரவ்சவுக் கான்ஸ்டான்டினுடன் மோதுகிறார். கிரவ்சவுக் தரவரிசையில் 84-வது இடத்தில் உள்ளார்.

போட்டி தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள ரஷ்யாவின் மிகைல் யூஸ்னி தனது முதல் சுற்றில் இந்தியாவின் சாகேத் மைனேனியுடன் மோதுகிறார். கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற சென்னை ஓபனில் யூஸ்னி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் தரவரிசையில் 192-வது இடத்தில் இருக்கும் மைனேனி வெற்றி பெற கடுமையாக போராட வேண்டியதிருக்கும். ஏடிபி போட்டியில் மைனேனி இதுவரை சாம்பியன் பட்டம் வென்றதில்லை. ஆனால் யூஸ்னி ஒற்றையர் பிரிவில் மட்டும் 10 பட்டங்களை வென்றுள்ளார். மற்ற ஆட்டங்களில் மால்டாவின் அல்போட் ராடு - சீன தைபேவின் யன் சன் லு, பிரேசிலின் டுட்ரா சில்வா - செர்பியாவின் லஜோவிக் டசன் ஆகியோர் மோதுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x