

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க விழா சென்னை ஜவாஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் இன்று நடைபெறுகிறது.
நடப்பு சாம்பியனான இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் ஆகியோர் இடையிலான உலக செஸ் போட்டி வரும் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை சென்னையில் உள்ள ஹயத் ரீஜென்ஸி ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
அதை முன்னிட்டு நடைபெறும் தொடக்க விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு சிறப்பு மலரை வெளியிட்டு தொடக்கவுரையாற்றுகிறார். அப்போது உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கான டிராவையும் முதல்வர் தேர்வு செய்கிறார்.
சர்வதேச செஸ் சம்மேளன தலைவர் கிர்சன் இல்யும்னோவ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். தமிழக அரசின் கலை மற்றும் பண்பாட்டுத் துறை சார்பில் நாதஸ்வர இன்னிசையும், வீணை காயத்ரி குழுவினரின் கச்சேரி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.