Published : 08 Oct 2014 03:13 PM
Last Updated : 08 Oct 2014 03:13 PM

முதல் ஒருநாள் போட்டி: பாகிஸ்தானை நசுக்கியது ஆஸ்திரேலியா

ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா எளிதில் வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா ஸ்டீவ் ஸ்மித்தின் சதத்துடன் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 255 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 36.3 ஓவர்களில் 162 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி அடைந்தது. வழக்கம் போல் ஜான்சன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஷார்ஜாவின் கடும் வெயிலில் ஸ்டீவ் ஸ்மித் அடித்த சதம், சென்னை வெயிலில் ஆஸ்திரேலிய வீரர் டீன் ஜோன்ஸ் எடுத்த 210 ரன்களுடன் ஒப்பிட்டு பேசப்பட்டு வருகிறது.

ஆரோன் பின்ச் முதல் பந்தில் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னருடன் (43) இணைந்து 2-வது விக்கெட்டுக்காக 86 ரன்களைச் சேர்த்தனர். ஷாகித் அஃப்ரீடி, வார்னரை வீழ்த்தினார்.

ஜார்ஜ் பெய்லி (18), மேக்ஸ்வெல் (21) மற்றும் ஜேம்ஸ் பாக்னர் (11) நன்றாகவே தொடங்கினர் ஆனால் பெரிய ஸ்கோருக்குச் செல்ல முடியவில்லை. பிராட் ஹேடின் 23 ரன்களும், ஜான்சன் 21 ரன்களும் எடுக்க 255 ரன்கள் என்ற இலக்கை எட்டியது ஆஸ்திரேலியா. ஸ்மித் 118 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பாகிஸ்தான் தரப்பில் 7 அடி உயர மொகமது இர்பான் அபாரமாக வீசி 10 ஓவர்களில் 35 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார். அப்ரீடி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். வஹாப் ரியாஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணியில் ஷேஜாத் (4) ரன்களில் ஜான்சனிடம் வெளியேறினார். ஆனால் சர்பராஸ் நவாஸ் அதிரடி ஆட்டம் ஆடினார். ஜேம்ஸ் பாக்னர் பந்தை இறங்கி வந்து ஸ்லாக் ஸ்வீப் பாணியில் அடித்த சிக்ஸ் இவர் ஒரு அபாய வீரர் என்பதை அறிவுறுத்தியது. ஆனால் அவர் 41 பந்துகளில் 3 பவுண்டரி ஒரு சிக்சருடன் 34 ரன்களில் நேதன் லயன் பந்தில் அவுட் ஆனார்.

அடுத்த பந்தே நேதன் லயனின் அபார பந்துக்கு கேப்டன் மிஸ்பா வெளியேறினார். அதன் பிறகு பார்மில் உள்ள உமர் அக்மல் மட்டுமே அதிகபட்சமாக 46 ரன்களை எடுத்தார். மற்றவர்கள் சோபிக்கவில்லை.

ஜான்சன் 3 விக்கெட்டுகளையும், வித்தியாசமான நேதன் லயன் 10 ஓவர்களில் 33 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ஆட்ட நாயகனாக ஸ்டீவ் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டார். 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்று முன்னிலை பெற்றது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x