

இங்கிலாந்தில் நடைபெறும் மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை கிரிக்கெட்டை முன்னிட்டு நடைபெற்ற ஊடக மற்றும் இரவு உணவு விருந்து நிகழ்ச்சியில் இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜிடம் கேள்விகள் கேட்கப்பட்டது.
இந்தியா, பாகிஸ்தான் அணிகளில் உங்களுக்குப் பிடித்த ஆண் கிரிக்கெட் வீரர் யார் என்று பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட போது கேப்டன் மிதாலி ராஜ் மிகவும் கூர்மையாக, “ஆண் கிரிக்கெட் வீரர்களிடம் இதே கேள்வியைக் கேட்பீர்களா? அதாவது அவர்களுக்குப் பிடித்த பெண் கிரிக்கெட் வீராங்கனை யார் என்று கேட்பீர்களா?” என்று பதில் கேள்வி கேட்டார்.
ஆண் கிரிக்கெட் வீரர்களுக்கும் எங்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. தொலைக்காட்சியில் நாங்கள் ரெகுலர் கிடையாது. கடைசி 2 உள்நாட்டுத் தொடர்களின் போது பிசிசிஐ நேரடி ஒளிபரப்பு முயற்சி செய்தது, சமூக வலைத்தளங்களிலும் ஓரளவுக்கு அங்கீகாரம் உள்ளது. ஆனால் இன்னமும் அங்கீகாரம் தேவை என்று உணர்கிறேன்.
ஆடவர் கிரிக்கெட்தான் இலக்கை நிர்ணயிக்கிறது. அவர்கள் நிர்ணயித்த தரநிலைகளை எட்டிப் பிடிக்கவே முயற்சி செய்கிறோம். ஆடவர் கிரிக்கெட்டை தொடர்ந்து கவனித்து வருகிறோம். அவர்கள் கிரிக்கெட் அடைந்துள்ள நிலையினை எட்டிப்பிடிக்கவே முயன்று வருகிறோம். நாங்களும் ஒரு தருணத்தில் ஆண் கிரிக்கெட் வீரரிடம் பயிற்சி பெற்றவர்கள்தான். பயிற்சிகளில் அவர்கள் நல்ல தீவிரம் காட்டுகின்றனர். அவர்கள் உண்மையில் கடினமாக வேலை வாங்குபவர்கள்தான்.
பெண் பயிற்சியாளர்களுக்குத் திறமை இல்லை என்பதல்ல விஷயம். பெண் பயிற்சியாளர்களுக்கும் திறமை உள்ளது. ஆனால் பயிற்சியில் தீவிரத்தைக் கடைபிடித்து பெரிய தொடர்களில் அதனைச் செயல்படுத்துமாறு செய்ய கடினமான பயிற்சியாளர் தேவை.
இவ்வாறு கூறினார் மிதாலி ராஜ்.