

எம்.சி.சி.-எஸ்.ஆர்.சுப்பிரமணியம் நினைவு ஐடிஎப் டென்னிஸ் போட்டி வரும் 10-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் (எம்சிசி) மைதானத்தில் நடைபெறுகிறது.
தொடர்ந்து 5-வது ஆண்டாக நடைபெறும் இந்தப் போட்டியில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், ஸ்ரீராம் பாலாஜி, ராம்குமார் ராமநாதன் மற்றும் ஆசிய, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆடவர் ஒற்றையர், இரட்டையர் என இரு பிரிவுகளில் நடைபெறும் இப்போட்டியின் தகுதிச்சுற்று வரும் 8-ம் தேதியும், பிரதான சுற்று வரும் 10-ம் தேதியும் தொடங்குகின்றன. இறுதிப் போட்டி மார்ச் 15-ம் தேதி நடைபெறுகிறது.
ஒற்றையர் பிரிவு பிரதான சுற்றில் மொத்தம் 32 பேர் பங்கேற்கின்றனர். இவர்களில் 20 பேர் நேரடித் தகுதி பெற்றுள்ளனர். 4 பேருக்கு வைல்ட்கார்ட் வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய 8 பேர் தகுதிச்சுற்றின் மூலம் பிரதான சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். ஆடவர் பிரிவில் 16 ஜோடிகள் பங்கேற்கின்றன. 13 ஜோடிகள் நேரடித்தகுதி பெற்ற நிலையில், 3 ஜோடிகளுக்கு வைல்ட்கார்ட் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் போட்டிக்கான பரிசுத் தொகை ரூ.6.2 லட்சமாகும்.