Published : 22 Feb 2017 03:08 PM
Last Updated : 22 Feb 2017 03:08 PM

புனேயில் முதல் டெஸ்ட்: இந்திய அணிக்கு அதிர்ச்சியளிக்குமா ஆஸ்திரேலியா?

19 டெஸ்ட் போட்டிகளில் எங்கும் தோல்வி அடையாத இந்திய அணியை ஆஸ்திரேலியா நாளை (வியாழன்) புனேயில் முதல் டெஸ்ட் போட்டியில் எதிர்கொள்கிறது.

கடந்த 20 உள்நாட்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 17-ல் வென்று 3-ஐ டிரா செய்துள்ளது. மாறாக ஆஸ்திரேலியாவோ ஆசியாவில் கடந்த 9 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி தழுவியுள்ளது.

இலங்கைக்கு எதிராக வெற்றி பெறும் சில தருணங்களிலும் ரங்கனா ஹெராத் ஆஸ்திரேலியாவை மூழ்கடித்தார். 0-3 என்று தோற்ற அந்தத் தொடரில் விளையாடிய 9 வீர்ர்கள் இந்த ஆஸ்திரேலிய அணியில் உள்ளனர். இவர்கள் அந்தத் தொடரிலிருந்து என்ன கற்றுக் கொண்டார்கள் என்பது இந்தத் தொடரில் தெரியவரும்.

நிச்சயம் அஸ்வின், ஜடேஜா, ஜெயந்த் யாதவ் ஆஸ்திரேலியாவுக்கு கடும் நெருக்கடி கொடுப்பார்கள் என்று உறுதியாக நம்பலாம். கடந்த முறை மைக்கேல் கிளார்க் தலைமையில் ஆஸ்திரேலியா இங்கு ஆடிய போது அஸ்வின், ஜடேஜா சேர்ந்து 53 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஒரே சதம்தான்; அதுவும் மைக்கேல் கிளார்க் அடித்ததே. கடந்த முறை ஆஸ்திரேலிய அணியில் சில வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையெல்லாம் எடுக்கப்பட்டது.

பிட்ச் எனும் பூதத்தை எண்ணி எண்ணியே அவர்கள் அந்தத் தொடரில் முழுதும் தோல்வியடைந்தனர். இம்முறை ரென்ஷா, ஹாண்ட்ஸ்கம்ப், ஷான் மார்ஷ் உள்ளனர். இதில் ஷான் மார்ஷ் மீது பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர் ஆஸ்திரேலிய அணியினர். இந்திய அணிக்கு அச்சுறுத்தல் ஆஸ்திரேலியாவின் சேவாக் என்று கருதப்படும் டேவிட் வார்னர்தான், அவர் ஸ்பின்னர்களை அதிரடி ஆடத் தொடங்கினால் கேப்டன் ஸ்மித், ஹாண்ட்ஸ்கம்ப், ஷான் மார்ஷ் என்று அனைவரும் தங்கள் தாக்கத்தை செலுத்துவர்.

தொடருக்கு முன்னால் ஆயிரம் பேசலாம் இரு அணிகளும், ஆனால் உண்மையான ஆட்டச்சூழல் என்பது முற்றிலும் வேறு. குறிப்பாக கேட்ச் விடுவதற்கு எந்த அணியும் திட்டமிட முடியாது. பந்து வீச்சில் இந்திய அணி கவனமாக இருக்க வேண்டியது ஹேசில்வுட், ஸ்டார்க், இவர்கள் தொடக்க விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தினால் விராட் கோலி, ரஹானே போன்றோருக்கு கடும் நெருக்கடி ஏற்படும், ஏற்படுத்துவார்கள். எப்படியாயினும் தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, இங்கிலாந்து போன்று கோலிக்கு இந்தத் தொடர் எளிதில் அமைந்து விடாது.

நிச்சயம் ஆஸ்திரேலிய அணியினர் வித்தியாசமாக ஏதாவது செய்வார்கள், அவர்கள் துபாயில் கடும் பயிற்சிகள் மேற்கொண்டு இங்கு வந்துள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு இந்தத் தொடர் முடிந்தவுடன் டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் செல்ல வாய்ப்புள்ளது, ஆனால் அதற்கு தொடரை அந்த அணி 3-0 அல்லது 4-0 என்று கைப்பற்ற வேண்டும், இது இயலாத காரியமாகவே இப்போதைக்குத் தெரிகிறது.

இந்திய அணியைப் பொறுத்தவரை ஜடேஜா எடுத்துள்ள 117 விக்கெட்டுகளில் 96 விக்கெட்டுகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதே. இந்திய அணிக்கு இந்தத் தொடர்களில் பின்கள வீரர்கள் பேட்டிங்கில் கைகொடுத்துள்ளனர், ஆனால் ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க் யார்க்கர்கள், பவுன்சர்களை வீசி டெய்ல் எண்டர்களை சோபிக்க விடாமல் செய்ய வாய்ப்புள்ளது, எனவே முரளி விஜய், ராகுல், புஜாரா, கோலி, ரஹானே, சஹா ஆகியோர் கையில்தான் பேட்டிங் உள்ளது. அஸ்வின், ஜெயந்த் யாதவ் பங்களிப்பு செய்யலாம் ஆனால் ஆட்டத்தையே மாற்றும் இன்னிங்சை ஆஸி.க்கு எதிராக ஆடுவது கடினமே.

கோலி கடந்த 13 டெஸ்ட் போட்டிகளில் 1457 ரன்களை 80 ரன்களுக்கும் மேலான சராசரியில் எடுத்துள்ளார், எனவே ஆஸ்திரேலியப் பார்வையில் நிச்சயம் கோலிதான் அவர்களது பெரிய அச்சுறுத்தல் என்பதில் ஐயமில்லை, இயன் சாப்பலும் இதைத்தான் எழுதியுள்ளார். எப்போதுமே எதிரணி கேப்டனை ஆஸ்திரேலியர்கள் குறைவைத்துத் தாக்குவர், எனவே கோலிக்கும் ‘கேக்வாக்’ கிடையாது.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அஸ்வின், ஜடேஜா, ஜெயந்த் யாதவ் என்று 3 ஸ்பின்னர்களைக் களமிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இசாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

வேகப்பந்து வீச்சாளர்களை கோலி நியாயமாகப் பயன்படுத்த வேண்டும், அஸ்வின், ஜடேஜாவுக்கு ஸ்பின் ஆவதற்காக பிட்சைத் ‘தயார்’ செய்யும் நோக்கத்துடன் வேகப்பந்து வீச்சாளர்களை கோலி பயன்படுத்தக் கூடாது.

இங்கிலாந்து போல் முதலில் பேட் செய்து 450-500 ரன்களை ஆஸ்திரேலியா எடுத்தால், இங்கிலாந்து போல் தோல்வியடைவதெல்லாம் மிகமிகக் கடினம். ஒருமுறை ஆஸ்திரேலிய அணிக்கு உத்வேகம் கிடைத்துவிட்டால் அவர்கள் விட மாட்டார்கள், அதே போல் ஆட்டச்சூழலில் இந்திய அணி பலவீனமாக இருக்கும் தருணங்களை இங்கிலாந்தைக் காட்டிலும் ஆஸ்திரேலியா சரியாக பயன்படுத்தி கடும் நெருக்கடி கொடுக்கும்.

கோலியின் ‘தேநிலவு’ உள்நாட்டு தொடர் இந்த தொடருடன் முடிகிறது. ஐசிசி-யின் எதிர்காலப் பயணத்திட்டம் (எஃப்டிபி) பிசிசிஐ-க்குச் சாதகமாக தொடர்ச்சியாக உள்நாட்டு தொடர்களை அளித்துள்ளது, இதில் இந்திய அணியின் சந்தை மதிப்பும், கோலியின் சந்தை மதிப்பும் கூடியுள்ளது, இந்தச் சந்தை மதிப்பு அயல்நாடுகளில் ஆடும்போது கீழிறங்காமல் பார்த்துக் கொள்வதே கோலி, அனில் கும்ப்ளே ஆகியோரது இலக்காக இருக்க வேண்டும். நாளை காலை 9.30க்கு ஆட்டம் தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x