Published : 17 Aug 2016 06:36 AM
Last Updated : 17 Aug 2016 06:36 AM

ஒலிம்பிக் பாட்மிண்டன்: நெ.2 வீராங்கனையை வீழ்த்தி பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்

உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் சீனாவின் வாங் யிகானை கடுமையாகப் போராடி வீழ்த்திய இந்தியாவின் பி.வி.சிந்து, ரியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான பாட்மிண்டன் ஒற்றையர் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.



இதன் மூலம் மிகுந்த ஏக்கத்துடன் காத்திருக்கும் தாய்நாட்டு மக்களுக்கு, ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கப் பட்டியலில் இடம்பெறுவதற்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளார் 21 வயது இளம் வீராங்கனை சிந்து.

மிகுந்த பரபரப்புடன் நடந்து முடிந்த காலிறுதிப் போட்டியில், லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரும், உலக தரவரிசையில் 2-வது இடம் பிடித்துள்ளவருமான சீனாவின் வாங் யிகானை 2-0 என்ற கணக்கில் அசத்தலாக வீழ்த்திய சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

இப்போட்டியில் சிந்து 22-20, 21-19 என்ற கணக்கில் இரண்டு செட்களையும் கைப்பற்றி வெற்றி பெற்றது கவனிக்கத்தக்க அம்சம். ஆரம்பத்தில் இருந்தே டிஃபன்ஸ் கேமில் கவனம் செலுத்திய சிந்து, அவ்வப்போது தனக்கு கிடைத்த வாய்ப்புகளை வெற்றி வியூகங்களாக மாற்றத் தவறவில்லை.

சில பிழைகளைச் செய்தாலும், இந்தப் போட்டியில் எந்த ஒரு சூழலிலும் சிந்து தனது மன உறுதியை இழக்காமல் வெற்றியை நோக்கி பயணித்தார். இருவருமே வேகத்தில் வல்லவர்கள் என்ற நிலையில், இந்தக் கடுமையான ஆட்டத்தில் தன் நிதானம் இழந்திடாமல் சாதுர்யத்தையும் கையாண்டதால் சிந்துவுக்கு இந்த வெற்றி சாத்தியமானது எனலாம்.

ரியோ ஒலிம்பிக் அரையிறுதிக்கு முன்னேறிய சிந்துவுக்கு இன்னும் ஒரே ஒரு வெற்றி கிட்டினால் கூட இந்தியாவுக்கு பதக்கம் உறுதியாகிவிடும். அதேவேளையில், சிந்துவின் இன்றைய ஆட்டத்தை கண்டு வியந்து ரசித்த பாட்மிண்டன் ரசிகர்களுக்கு, ஒலிம்பிக் பாட்மிண்டனில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்றும் தருவதும் சிந்துவால் சாத்தியமே என்ற நம்பிக்கை கொள்வர்.

சிந்துவின் சுதந்திர தின மகிழ்ச்சி

முன்னதாக, கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் சிந்து, தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள சீன தைபேவின் தி ட்சூ யிங்கை 21-13 21-15 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். அந்த வெற்றி குறித்து கூறும்போது, "சுதந்திரதினத்தன்று வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. காலிறுதியில் வாங் யிகானுக்கு எதிரான இந்த ஆட்டம் மிகவும் கடினமாகவே இருக்கும். எனினும் சிறந்த பங்களிப்பை வழங்குவேன். போட்டிக்கான திட்டங்கள் குறித்து பயிற்சியாளருடன் ஆலோசனை நடத்துவேன்.

வாங் யிகானை சர்வதேச போட்டிகளில் நான் எதிர்கொண்டு நீண்ட காலம் ஆகிவிட்டது. தற்போதும் அவர் சிறப்பாகவே விளையாடி வருகிறார். அவரை வெல்வது அவ்வளவு எளிதாக இருக்காது. போட்டி நடைபெறும் நாளில் வெற்றிக்கான வியூகம் அமைப்பதை பொறுத்தே ஆட்டத் தின் முடிவு இருக்கும்" என்றார்.

சிந்து சொன்னது போலவே நிகழ்த்திக் காட்டி, பாட்மிண்டனில் வாங் யிகான் எனும் சீனப் பெருஞ்சுவரைத் தகர்த்து ஒலிம்பிக் பதக்கம் நோக்கி உத்வேகத்துடன் முன்னேறியிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x