Published : 20 Feb 2014 11:33 AM
Last Updated : 20 Feb 2014 11:33 AM

டெஸ்ட் தரவரிசையில் சாதித்தார் கோலி: 9-வது இடத்துக்கு முன்னேற்றம்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய துணை கேப்டன் விராட் கோலி 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். டெஸ்ட் தரவரிசையில் அவர் பெற்றுள்ள அதிகபட்ச முன்னேற்றம் இது.

நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஓரளவுக்கு சிறப்பாக விளையாடியதன் மூலம் அவர் தரவரிசையில் 11-வது இடத்தில் இருந்து 9-வது இடத்தைப் பிடித்தார். நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 4 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து கோலி 214 ரன்கள் எடுத்தார். இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் கோலி 105 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இதன் மூலம்தான் இந்திய அணி அப்போட்டியை டிரா செய்ய முடிந்தது. விராட் கோலி தவிர டெஸ்ட் தரவரிசையில் டாப் 10-ல் இடம் பெற்றுள்ள மற்றொரு இந்திய வீரர் புஜாரா மட்டும்தான். அவர் 7-வது இடத்தில் உள்ளார்.

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின், 2 இடங்கள் பின்தங்கி 10-வது இடத்துக்கு வந்துள்ளார். எனினும் இந்தியப் பந்து வீச்சாளர்களில் தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவர் அவர்தான். அவருக்கு அடுத்தபடியாக பிரக்யான் ஓஜா 12-வது இடத்தில் உள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் முச்சதம் அடித்த நியூஸிலாந்து கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம் தரவரிசையில் 8 இடங்கள் முன்னேறி 12-வது இடத்துக்கு வந்துள்ளார். டெஸ்ட் தரவரிசையில் அவர் பெற்றுள்ள அதிகபட்ச முன்னேற்றம் இது.

பேட்ஸ்மேன்கள் வரிசையில் தென்னாப்பிரிக்காவின் ஏ.பி. டிவில்லியர்ஸ், இலங்கையின் குமார் சங்ககாரா, மேற்கிந்தியத் தீவுகளின் சிவநாராயண் சந்தர்பால் ஆகியோர் தொடர்ந்து முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x