கிரிக்இன்போ சார்பில் சிறந்த கேப்டனாக கோலி தேர்வு

கிரிக்இன்போ சார்பில் சிறந்த கேப்டனாக கோலி தேர்வு
Updated on
1 min read

2016-ம் ஆண்டின் சிறந்த கேப்டனாக இந்தியாவின் விராட் கோலியை இஎஸ்பிஎன் கிரிக்இன்போ இணையதளம் தேர்ந்தெடுத்துள்ளது.

இஎஸ்பிஎன் கிரிக்இன்போ இணையதளம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்து விளங்கும் கிரிக்கெட் வீரர் மற்றும் கேப்டனுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட் கேப்டனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கோலி தலைமையில் இந்திய அணி கடந்த ஆண்டில் 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9 வெற்றிகளை பதிவு செய்திருந்தது. சிறந்த டெஸ்ட் வீரராக இங்கிலாந்தின் ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் தேர்வாகி உள்ளார்.

அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் 198 பந்துகளில் 258 ரன்கள் சேர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டோக்ஸின் சக அணி வீரரான ஸ்டூவர்ட் பிராடு சிறந்த பந்து வீச்சாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்டில் அவர் 17 ரன்களுக்கு 6 விக்கெட்களை வீழ்த்தி தொடரை கைப்பற்ற உதவியிருந்தார். இந்த விருதை அவர் 2-வது முறையாக பெற உள்ளார்.

இந்த விருதுக்கான வீரர்களை இஎஸ்பிஎன் கிரிக்இன்போ இணையதளத்தின் மூத்த ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், நிருபர்கள் மற்றும் முன்னாள் வீரர்களான இயன் சேப்பல், ஜெயவர்தனே, ரமீஸ் ராஜா, வால்ஷ், மார்க் பட்சர், வீராங்கனை இஷா குஹா, நடுவர் சைமன் டவுபேல் பத்திரிகையாளர் சமித் பால் ஆகியோரை உள்ளடக்கிய குழு தேர்வு செய்துள்ளது.

சிறந்த ஒருநாள் போட்டி வீரராக தென் ஆப்பிரிக்காவின் குயிண்டன் டி காக்கும், பந்து வீச்சாளராக மேற்கிந்தியத் தீவுகளின் சுனில் நரேனும் தேர்வாகி உள்ளனர். டி20 ஆட்டத்தின் சிறந்த வீரராக மேற்கிந்தியத் தீவுகளின் கார்லோஸ் பிராட் வெயிட்டும், சிறந்து பந்து வீச்சாளராக வங்கதேசத்தின் முஸ்டாபிஜூர் ரஹ்மானும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வங்கதேச சுழற்பந்து வீச்சாளர் மெகதி ஹசன் சிறந்த அறிமுக வீரர் விருதை பெற உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in