Published : 08 Jul 2016 09:40 AM
Last Updated : 08 Jul 2016 09:40 AM

ஷிவா தாபா: மைக் டைசன் விதைத்த கனவு

2005-ம் ஆண்டு நொய்டாவில் தேசிய குத்துச் சண்டை போட்டிகள் பரபரப்பாக நடந்துகொண்டிருந்தது. சப் ஜூனி யர் பிரிவில் கலந்துகொள்வதற் காக வந்த ஒரு சிறுவனின் எடையை சோதித்த போட்டி அமைப்பாளர்கள், அவன் போட்டியில் கலந்துகொள்ள தேவையான 36 கிலோ எடையைக் கொண்டிருக்கவில்லை என்று ஒதுக்கினார்கள்.

அந்த சிறுவனின் முகத்தில் ஏமாற்றம். போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற சோகத்தில் அவன் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. சிறுவனை அணைத்த அவனது தந்தை, அவன் காதில் கிசுகிசுத்தார். சிறுவனின் கண்கள் ஒளிர்ந்தன. உடனே ஓடிப்போய் 2 லிட்டர் தண்ணீரைக் குடித்தான். எதற்கும் இருக்கட்டும் என்று மேலும் சிறிது தண்ணீரை குடித்தான். போட்டி அமைப்பாளர்களிடம் போய், “இப்போது என் எடையைப் பாருங்கள்” என்றான். முன்பு 36 கிலோ எடைகூட இல்லாமல் இருந்த அந்தச் சிறுவன் இப்போது 38 கிலோ எடைப்பிரிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டான். அதே உற்சாகத்தில் போட்டியில் கலந்துகொண்ட சிறுவன் பதக்கத்தையும் வென்றான். விடா முயற்சியுடன் அந்த போட்டியில் கலந்துகொண்ட சிறுவன்தான் இன்று ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் நட்சத்திரமாய் ஜொலிக்கும் ஷிவா தாபா..

அசாமில் இரண்டு கிராமங்களுக்கு இடையே கடந்த தலைமுறையில் இருந்துவந்த ஊர்ப்பகைதான் ஷிவா தாபா நமக்கு கிடைக்க முக்கிய காரணம். அசாமில் உள்ள இருபாரி பசார் கிராமத்தினருக்கும், காலா பஹாட் கிராமத்தினருக்கும் இடையே முன்பு அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வந்தன. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது இருபாரி பசார் கிராமத்து இளைஞர்கள்தான். இதற்கு முடிவுகட்ட விரும்பிய அவர்கள் பதாம் தாபா என்ற இளைஞர் தலைமையில் ஒரு கராத்தே மாஸ்டரை அணுகினார்கள். தங்கள் ஊரில் ஒரு பயிற்சி மையத்தை தொடங்குமாறு கேட்டுக்கொண்டனர்.

அந்த கராத்தே மாஸ்டரும் இருபாரி பசாரில் பயிற்சி மையத்தை தொடங்கினார். இதில் பயிற்சி பெற்ற பதாம் தாபா, உள்ளூரில் மிகப்பெரிய கராத்தே வீரரானார். தேசிய அளவிலான போட்டிகளிலும் கலந்துகொண்டார். ஆனால் அவரால் பதக்கங்களை வெல்ல முடியவில்லை. தான் கண்ட கனவுகளை எல்லாம் தன் மகன்கள் நிறைவேற்ற வேண்டும் என்று விரும்பி அவர்களை உருவாக்கினார். அவரது இரண்டு மகன்களில் ஒருவர்தான் ஷிவா தாபா.

“கராத்தேவை நான் முதலில் ஒரு தற்காப்புக் கலையாகத்தான் கற்றேன். பிறகு போட்டிகளில் கலந்துகொண்டதும், அவற்றில் பதக்கங்களை வெல்லவேண்டும் என்ற வெறி ஏற்பட்டது. என்னால் அது முடியாத நிலையில் என் மகன்களை வைத்து அந்தக் கனவை நிறைவேற்ற விரும்பினேன். கராத்தேவை விட குத்துச்சண்டையில் வாய்ப்புகள் அதிகம் என்பதால் அவர்களுக்கு அதில் பயிற்சி கொடுத்தேன்” என்கிறார் பதாம் தாபா.

சிறுவயதில் ஷிவா தாபாவுக்கு குத்துச்சண்டை மீது அதிக மோகம் இல்லை. தந்தைக்காக 7 வயது முதல் குத்துச்சண்டை கற்றுக்கொண்டாலும் தடகளம் மற்றும் கால்பந்து போட்டிகளின் மீதுதான் ஷிவா தாபாவின் கவனம் இருந்தது. இந்த நிலையில்தான் மைக் டைசனின் குத்துச்சண்டை போட்டி ஒன்றை தொலைக்காட்சியில் பார்த்தார். அவரது வேகமும் துடிப்பும், தானும் ஒரு குத்துச்சண்டை வீரனாக வேண்டும் என்ற கனவை ஷிவா தாபாவுக்குள் விதைத்தது.

அன்றிலிருந்து அதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கினார். தினமும் காலை 3 மணிக்கு எழும் ஷிவா தாபா, 7 மணிவரை குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபடுவார். அதன்பிறகு பள்ளிப் படிப்பில் கவனம் செலுத்துவார். இப்படி ஒரே நேரத்தில் கல்வியையும் குத்துச்சண்டையையும் இரு கண்களாக பாவித்து இரண்டிலும் தீவிர பயிற்சி பெற்றார். ஷிவா தாபாவைப் போலவே அவரது அண்ணன் கோவிந்த் தாபாவும் குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபட்டார்.

மகன்களுக்கு சிறந்த பயிற்சியளிக்க குவாஹாட்டிக்கு இடம்பெயர்ந்த பதாம் தாபா, சொற்ப வருமானத்தில் தன் 6 குழந்தைகளை வளர்த்ததுடன், அதில் இருவருக்கு தீவிர குத்துச்சண்டை பயிற்சியும் அளித்தார். மகன்களும் ஏமாற்றவில்லை. மூத்தவர் மாநில அளவிலான போட்டிகளில் ஜெயிக்க, இளையவரான ஷிவா தாபா, ஒலிம்பிக் வரை முன்னேறினார். 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்ட இளம் இந்திய வீரர் என்று பெயர்பெற்ற அவர், அப்போது தோல்வியடைந்தாலும் இந்த ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் கனவுடன் களம் இறங்குகிறார்.

“குத்துச்சண்டைதான் எனக்கு அடையாளத்தைக் கொடுத்தது. குத்துச்சண்டை களத்தில் நிற்கும் போது என்னை ஷிவா தாபாவா கவோ, அசாம் மாநிலத்தை சேர்ந்த வனாகவோ, வடகிழக்கு மாகா ணங்களை சேர்ந்தவனாகவோ யாரும் பார்ப்பதில்லை. நாட்டின் கவுரவத்தை நிலைநிறுத்தப் போராடும் ஒரு இந்தியனாகத்தான் பார்க்கிறார்கள். அதுவே எனக்கு பெருமை” என்கிறார் ஷிவா தாபா.

இந்த இளைஞர் ரியோ ஒலிம்பிக்கில் நமக்கு மேலும் பெருமை சேர்ப்பார் என்று நம்புவோம்.

இதுவரை சாதித்தவை

*2013-ல் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.

*2015-ல் நடந்த உலக அமெச்சூர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

*பேன்டம்வெயிட் குத்துச்சண்டை பிரிவில் இப்போது உலகின் 3-ம் நிலை வீரராக இருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x