Published : 09 Mar 2015 05:24 PM
Last Updated : 09 Mar 2015 05:24 PM

இங்கிலாந்தை வீட்டுக்கு அனுப்பி காலிறுதிக்கு முன்னேறியது வங்கதேசம்

அடிலெய்டில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் ஏ-பிரிவு ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வங்கதேசம் காலிறுதிக்குத் தகுதி பெற்றது. இங்கிலாந்து அதிர்ச்சி வெளியேற்றம் கண்டது.

276 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து ஆடிய இங்கிலாந்து 48.3 ஓவர்களில் 260 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் காலிறுதி வாய்ப்பை இங்கிலாந்து இழந்தது. அந்த அணி ஆப்கனை வென்றாலும் 4 புள்ளிகள் மட்டுமே பெறும்.

ஆனால் வங்கதேசம் 7 புள்ளிகளுடன் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. முதன் முறையாக உலகக்கோப்பை நாக் அவுட் சுற்றில் பங்கேற்கிறது வங்கதேசம், 2007 உலகக்கோப்பை போட்டிகளில் கடைசி 8 அணிகள் சுற்றுக்கு முன்னேறியது ஆனால் அது நாக் அவுட் முறைப்படி நடத்தப்பட்டது அல்ல.

துல்லியம், கட்டுக்கோப்பு மூலம் இங்கிலாந்துக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து காலி செய்த வங்கதேசப் பந்துவீச்சு:

மொயீன் அலி, இயன் பெல் களமிறங்க, வங்கதேச அணியில் மோர்டசா, ரூபல் ஹுசைன் பவுலிங்கைத் தொடங்கினர். 2-வது ஓவரில் மொயீன் அலி முதல் பவுண்டரியை அதிர்ஷ்டவசமாக அடிக்க, 2-வது பவுண்டரியை அதே ஓவரில் கவர் பாயிண்ட்டில் அடித்தார். அடுத்த பந்து எல்.பி.க்கு மிக பலமான முறையீடு செய்யப்பட்டது. அவுட் என்றார் நடுவர். மொயீன் அளி ரிவியூ கேட்டார். ரிவியூவில் பந்து லேசாக லெக் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆனது தெரியவர நாட் அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. தப்பினார் மொயீன் அலி.

ஆட்டத்தின் 7-வது ஓவரை மோர்டசா வீச, இயன் பெல் 3-வது பந்தை பின்னால் சென்று பஞ்ச் செய்ய பாயிண்டில் பவுண்டரி. அடுத்ததாக எக்ஸ்ட்ரா கவர் திசையில் அபாரமாகத் தூக்கி அடித்து மேலும் ஒரு பவுண்டரி. மீண்டும் ஒரு பேக்ஃபுட் பஞ்ச் மீண்டும் ஒரு பவுண்டரி என்று அந்த ஓவரில் பெல் அசத்தினார். 7 ஓவர்களில் 43 ரன்கள் என்று அருமையான தொடக்கம் கண்டது இங்கிலாந்து.

இயன் பெல்லினால் ரன் அவுட் ஆன மொயீன் அலி:

ஆட்டத்தின் 8-வது ஓவரில் அராபத் சன்னி வீச மொயீன் அலி ஆன் திசையில் தட்டிவிட்டு சிங்கிள் ஒன்றை எடுக்கலாம் என்று நினைத்து ஓடினார். பெல் பந்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க, அலி திரும்பி கிரீஸை நோக்கி வந்து டைவ் அடித்துப் பார்த்தார். ஆனால் த்ரோ மிக நல்ல த்ரோ. மொயீன் அலி 19 ரன்களில் ரன் அவுட். தேவையில்லாத ரன் அவுட், இயன் பெல் ஓடியிருக்கலாம் ஆனால் அவர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். எப்போதும் 2 அல்லது 3 அடி ஓடிவிட்டு திரும்புவது மிகவும் கடினமே.

43/1 என்ற நிலையில் அலெக்ஸ் ஹேல்ஸ் (27 ரன்கள், 34 பந்து, 4 பவுண்டரிகள்) கொஞ்சம் ஆக்ரோஷம் காட்ட ஸ்கோர் அடுத்த 12 ஓவர்களில் மேலும் 54 ரன்கள் அதிகரித்து 97 என்று ஆனது. மோர்டசா ஓவரில் மிட்விக்கெட்டில் ஒரு புல் பவுண்டரியையும், கட் ஷாட்டில் ஆஃப் திசையில் ஒரு பவுண்டரியையும் அடித்து தன்னம்பிக்கையுடன் சென்று கொண்டிருந்த நேரத்தில் ஹேல்ஸ், மோர்டசா பந்தை ஆடப்போக பந்து மட்டையின் வெளி விளிம்பில் பட்டு முஷ்பிகுர் ரஹிமிடம் கேட்ச் ஆனது. 20-வது ஓவரில் 97/2.

ரூபல் ஹுசைனின் திருப்பு முனை ஓவர்:

இயன் பெல் அதன் பிறகு அராபத் சன்னி பந்தில் சிங்கிள் ஒன்றை எடுத்து 66 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்தார். ரூட் களமிறங்கினார்.

அடுத்த 6 ஓவர்கள் மிகவும் இறுக்கமாக ரன்கள் எதுவும் வரவில்லை. 26-வது ஓவர் முடிவில் ஸ்கோர் 124 ரன்களை எட்டிய போது 82 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுத்த இயன் பெல், கொஞ்சம் ஏறி வந்து கவர் திசையில் அடிக்க முனைந்தார். ரூபல் ஹுசைன் பந்து நல்ல பகுதியில் விழுந்தது. ஷாட் மாட்டவில்லை, பந்து மட்டையின் விளிம்பில் பட்டு வி.கீப்பர் முஷ்பிகுரிடம் கேட்ச் ஆனது.

இங்கிலாந்து கேப்டன் மோர்கன் களமிறங்கினார். மிகவும் மோசமான பார்மில் அவர் இருக்கிறார். இவரிடமிருந்து நல்ல இன்னிங்ஸை எதிர்பார்த்த நிலையில் அவருக்கு பொறி வைக்கப்பட்டது. ரூபல் ஷார்ட் பிட்ச் பந்தை வீச மோர்கன் ஹூக் ஆடினார். பந்து சிக்சர்தான் என்று நினைக்கும் தருணத்தில் ஃபைன் லெக் பீல்டர் ஷாகிப் அல் ஹசன் அபாரமாக அதைக் கேட்ச் பிடித்தார். இங்கிலாந்து 121/4 என்று ஆனது.

அடுத்ததாக டெய்லர் 1 ரன் எடுத்த நிலையில் வேகப்பந்து வீச்சாளர் டஸ்கின் வீசிய ஆஃப் ஸ்டம்ப்பிற்கு வெளியே போகும் பந்தை தொட்டார் இம்ருல் கயேஸ் ஸ்லிப்பில் கேட்ச் பிடித்தார். 132/5.

அதன் பிறகு பட்லர் களமிறங்கி 2 பவுண்டரிகள் அடித்தார். 33-வது ஓவரில் இங்கிலாந்து 150 ரன்களை எட்டியது. ரூட் ஒரு முனையில் அமைதியாக 29 ரன்களை எடுத்திருந்தார். பேட்டிங் பவர் பிளேயில் மோர்டசா மீண்டும் பந்துவீச வந்து அருமையான ஆஃப் திசை ஃபுல் லெந்த் பந்தை வீச ரூட் எட்ஜ் செய்து வெளியேறினார். பந்து பிட்ச் ஆகி சற்றே நிதானித்ததில் ஏமாந்தார் ரூட். 163/6.

பட்லர், வோக்ஸ் போராட்டம்:

அங்கிருந்து பட்லர், வோக்ஸ் அதிரடியில் அடுத்த 10 ஓவர்களில் 72 ரன்கள் விளாசப்படுகிறது. ஓவருக்கு 10 ரன்கள் பக்கம் சென்ற தேவைப்படும் ரன் விகிதம் ரன்களுக்குள் குறைந்தது. பட்லர் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 52 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து டஸ்கின் அகமது வீசிய ஆஃப் ஸ்டம்ப் பந்தை தொட்டு கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

முதலில் 2 பவுண்டரிகள் அடித்த பட்லர் அதன் பிறகு அராபத் சன்னி பந்தை இறங்கி வந்து எக்ஸ்ட்ரா கவர் திசையில் மிகப்பெரிய சிக்சரை அடித்தார். 41-வது ஓவரில் 11 ரன்கள் பிறகு 42-வது ஓவரில் 11 ரன்கள். 43-வது ஓவரில் 8 ரன்கள், 44-வது ஓவரில் 13 ரன்கள். 45-வது ஓவரில் 5 ரன்கள் வர 229/6 என்று இங்கிலாந்து அச்சுறுத்தியது. அப்போதுதான் 46-வது ஓவரில் பட்லர் 65 ரன்களில் வெளியேறினார்.

அதே ஓவரில், ஜோர்டான் அடுத்த பந்தை ஆஃப் திசையில் தட்டிவிட்டு ரன் எடுக்க முனைந்தார். எதிர்முனையில் வோக்ஸ் பேசாமல் இருந்தார். ஏனெனில் அது ஓவரின் கடைசி பந்து இதில் எதற்கு ஜோர்டான் சிங்கிள் எடுக்க வேண்டும், எனவே அவர் அசையவில்லை, கிரீசுக்கு திரும்பி வந்து டைவ் அடித்தார் ஜோர்டான் பந்து அதற்குள் நேராக ஸ்டம்பில் பட்டது. அருமையான த்ரோ. ஜோர்டான் ரீச் ஆனது போல் தெரிந்தது. ஆனால் ஏகப்பட்ட ரீப்ளேயில் ஜோர்டான் பேட் போதுமான அளவுக்கு கிரீசில் இல்லை என்பது தெரியவர அவுட் கொடுக்கப்பட்டார். ஆனால் இது சர்ச்சையைக் கிளப்பும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

238/8 என்ற நிலையில் வோக்ஸுடன் பிராட் இணைந்தார். 47-வது ஓவரை ஷாகிப் அல் ஹசன் வீச சக்தி வாய்ந்த ஸ்வீப் ஷாட்டில் பவுண்டரியுடன் 47-வது ஓவரில் 7 ரன்கள் வந்தது. 48வது ஓவரில் டக்சின் வீசிய ஷாட் பிட்ச் பந்தை பிராட் அருமையான ஹூக் ஆடி சிக்சருக்குத் தூக்கினார்.

தப்பினார் பிராட்! தமிம் இக்பால் விட்ட 'அல்வா' கேட்ச்:

ஆட்டம் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் போது, இங்கிலாந்து வெற்றிக்குத் தேவை 20 ரன்கள். மீதமுள்ள பந்துகள் 15. அப்போது டக்சின் அகமட் வீசிய பந்தை வோக்ஸ் லாங் ஆனில் தூக்கி அடித்தார். அது நீளமான பவுண்டரி. ஷாட் சரியாகச் சிக்கவில்லை. பந்து அருமையாக நேராக தமீம் கைக்கு வந்தது.

கையை மேலே உயர்த்திக் குவித்துப் பிடிக்க முயன்ற தமீம் கையிலிருந்து பந்து நழுவியது. கேட்சை விட்டார்... அல்ல உலகக்கோப்பைக் காலிறுதியை கோட்டைவிட்டார் என்றே கூற வேண்டும்.

ஆனால் இதனை ஒரு வரமாக இங்கிலாந்து நினைக்கவில்லை. அடுத்த ஓவரை ரூபல் ஹுசைன் வீச வந்தார். முதல் பந்து பெரிய யார்க்கர் என்றெல்லாம் கூற முடியாது. ஆனால், பீல்டைக் கொஞ்சம் ஸ்கொயர் லெக் திசையில் அவர் அட்ஜஸ்ட் செய்ய அது ஷாட் பிட்ச் பந்தாக அமையலாம் என்று பிராடை எதிர்பார்க்க வைத்து யார்க்கர் லெந்தில் வீசினார். பிராட் ஏமாந்தார், ஷாட் பிட்ச் பந்தை எதிர்பார்த்த அவர் கால்களை நகர்த்தவில்லை மட்டையையும் சரியாகக் கொண்டு வரவில்லை. பவுல்டு ஆனார். பந்தின் வேகம் 142 கிமீ என்பது குறிப்பிடத்தக்கது.’’

அடுத்ததாக ஆண்டர்சன் விக்கெட்டையும் யார்க்கரில் வீழ்த்தினார் ரூபல் ஹுசைன். மைதானத்தில் வங்கதேச ரசிகர்களின் உற்சாகம் உச்ச நிலைக்குச் சென்றது. உலகக்கோப்பை நாக் அவுட் சுற்றுக்கு முதன் முதலாக வங்கதேசம் நுழைந்தது. வங்கதேசத்தின் பந்துவீச்சு துல்லியத்துக்கு எடுத்துக்காட்டு. உதிரிகள் வகையில் 5 ரன்கள்தான், அதில் லெக் பை 4, ஒரேயொரு நோ-பால் அதுவும் இடுப்புக்கு மேல் சென்ற பந்து என்ற வகையில் ஆட்டத்தின் பரபரப்பான இறுதி கட்டத்தில் நிகழ்ந்தது. ஒரு வைடு கூட வீசவில்லை. இது ஒரு சாதனையாகக் கூட இருக்க வாய்ப்பிருக்கிறது. ஒரு வைடு கூட வங்கதேச வீச்சாளர்களால் வீசப்படவில்லை.

ஆட்ட நாயகனாக அருமையாக ஆடி தன் அணிக்காக முதல் உலகக்கோப்பை சதத்தையும், தனது முதல் ஒருநாள் சதத்தையும் எடுத்த மஹ்முதுல்லா தேர்வு செய்யப்பட்டார்.

பிரிவு ஏ-யில் காலிறுதிக்கு முன்னேறிய அணிகள்:நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம்.

இங்கிலாந்துக்கு ஆப்கன் அணியுடன் இருக்கும் இன்னொரு போட்டி வெறும் சம்பிரதாயப் போட்டியே. தொடக்கத்திலிருந்தே உலகக்கோப்பை போட்டிகளில் ஒரு நாட்டமில்லாத அணியாக விளையாடியது இங்கிலாந்து, அவர்களது கேப்டன் மோர்கன் மீது இங்கிலாந்து வைத்திருந்த நம்பிக்கை வீண் போனது.

வெற்றிக்கு வித்திட்ட மஹ்முதுல்லாவின் சாதனை சதம்!

டாஸ் வென்ற இங்கிலாந்தினால் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட வங்கதேசம் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் என்ற சவாலான இலக்கை எட்டியது.

ஒருநாள் போட்டிகளில் தன் முதல் சதமெடுத்த மஹ்முதுல்லா உலகக்கோப்பை போட்டிகளில் சதம் எடுத்த வங்கதேச வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தினார். 8 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என்ற நிலையில் களமிறங்கிய மஹ்முதுல்லா 138 பந்துகளில் 7 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 103 ரன்கள் எடுத்து 5-வது விக்கெட்டாக 46-வது ஓவரில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார்.

விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் மீண்டும் அற்புதமான ஒரு இன்னிங்சை ஆடி 77 பந்துகளில் 8 பவுண்டரி 1 சிக்சருடன் 89 ரன்கள் எடுத்தார்.

சவும்யா சர்க்கார் (40) 3-வது விக்கெட்டுக்காக மஹ்முதுல்லாவுடன் இணைந்து இருவரும் 86 ரன்களை சேர்க்க, முஷ்பிகுர், மஹ்முதுல்லா ஜோடி இணைந்து 141 ரன்களை 5-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். கடந்த உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்தைச் சந்தித்த பிறகு இங்கிலாந்து அணியை வங்கதேசம் நடுவில் சந்திக்கவில்லை. சிட்டகாங்கில் நடைபெற்ற 2011 உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து தோல்வி தழுவியது நினைவிருக்கலாம்.

முன்னதாக பிட்சில் கொஞ்சம் ஸ்விங் இருக்க, அதனைப் பயன்படுத்திய ஆண்டர்சன் 3 ஸ்லிப்களுடன் வீசினார். இதில் இம்ருல் கயேஸ் 3-வது ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேற, தமிம் இக்பாலும் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து சொற்ப ரன்களில் வெளியேறினார். மேலும் ஒரு ஸ்லிப் கூட்டப்பட முதல் ஸ்பெல்லில் ஆண்டர்சன் 6 ஓவர்களில் 20 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஷாகிப் அல் ஹசன், மொயீன் அலி பந்து அவ்வளவு திரும்பும் என்று எதிர்பார்க்கவில்லை. 2 ரன்னில் ரூட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். வங்கதேசம் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் எடுத்தது.

கிறிஸ் ஜோர்டானுக்கு வாய்ப்பு அளிக்கப் படாமல் அவர் சரியாக வீசவில்லை. கடைசி ஓவர்களில்தான் அவர் சரியாக வீசினார். வோக்ஸ் இன்று 10 ஓவர்களில் 64 ரன்கள் கொடுத்து சோபிக்காமல் போனார். பிராட் சுமாராக வீசி 52 ரன்களுக்கு 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x