Published : 27 Nov 2013 04:38 PM
Last Updated : 27 Nov 2013 04:38 PM

தொடரை வென்றது இந்தியா : தவாண் அதிரடி

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா.

முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இந்தியா 46.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் குவித்து வெற்றி கண்டது. ஷிகர் தவண் சதமடித்து இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்தார்.

இந்தியா பீல்டிங்

4 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணியில் சார்லஸ் 11 ரன்களில் ஆட்டமிழக்க, கிரண் பாவெலுடன் இணைந்தார் மார்லான் சாமுவேல்ஸ்.

பாவெல் அரைசதம்

கிரண் பாவெல் 66 பந்துகளிலும், சாமுவேல்ஸ் 73 பந்துகளிலும் அரைசதத்தை எட்டினர். அந்த அணி 137 ரன்களை எட்டியபோது இந்த ஜோடியைப் பிரித்தார் அஸ்வின். 81 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 70 ரன்கன் எடுத்த பாவெல், பைன் லெக் திசையில் ஷிகர் தவணிடம் கேட்ச் ஆனார். பாவெல்-சாமுவேல்ஸ் ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 117 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து சாமுவேல்ஸுடன் இணைந்தார் டேரன் பிராவோ. இந்த ஜோடி சிறப்பாக ஆடி ரன் சேர்த்தது. இதனால் 34-வது ஓவரில் 150 ரன்களைக் கடந்தது மேற்கிந்தியத் தீவுகள். சாமுவேல்ஸ் 71 ரன்களை எட்டியபோது அஸ்வின் பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். அவர் 93 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் இந்த ரன்களை எடுத்தார். பாவெல், சாமுவேல்ஸ் இருவருமே தலா 60 ரன்களில் இருந்தபோது கோலி மற்றும் ஜடேஜா கோட்டைவிட்ட கேட்ச்சால் தப்பிப் பிழைத்தனர்.

சிக்கலை ஏற்படுத்திய பவர்பிளே

பின்னர் வந்த சிம்மன்ஸ் 2 பவுண்டரிகளுடன் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 35-வது ஓவரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி பேட்டிங் பவர் பிளே எடுத்தது அந்த அணிக்கு சிக்கலாக அமைந்தது. அதனால் 26 ரன்களுக்கு சாமுவேல்ஸ், சிம்மன்ஸ் ஆகியோரை இழந்தது. இதையடுத்து வந்த கேப்டன் டுவைன் பிராவோ 4 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க, மேற்கிந்தியத் தீவுகள் அணி 41.5 ஓவர்களில் 196 ரன்கள் எடுத்து தடுமாறியது.

சமி அதிரடி

6-வது விக்கெட்டுக்கு டேரன் பிராவோவுடன் இணைந்த டேரன் சமி அதிரடியில் இறங்க, மேற்கிந்தியத் தீவுகளின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. முகமது சமி மற்றும் மோஹித் சர்மா ஓவர்களில் தலா ஒரு சிக்ஸரை விளாசினார் டேரன் சமி. இதனால் 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் சேர்த்தது மேற்கிந்தியத் தீவுகள். பிராவோ 53 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 51, டேரன் சமி 29 பந்துகளில் 2 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த ஜோடி கடைசி 8 ஓவர்களில் 67 ரன்கள் சேர்த்தது.

ரோஹித் 4

பின்னர் ஆடிய இந்திய அணியில் ஷிகர் தவண் ஆரம்பம் முதலே அதிரடியில் இறங்கினார். ஜேசன் ஹோல்டர் வீசிய ஆட்டத்தின் 2-வது ஓவரில் 3 பவுண்டரிகளை விரட்டிய தவண், முதல் 4 ஓவர்களில் 6 பவுண்டரிகளை விளாசித் தள்ளினார். மறுமுனையில் 14 பந்துகளைச் சந்தித்த ரோஹித் சர்மா 4 ரன்களில் வெளியேற, ஷிகர் தவணுடன் இணைந்தார் விராட் கோலி. இந்த ஜோடியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. இந்தியா 61 ரன்களை எட்டியபோது விராட் கோலி (18 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 19 ரன்கள்) எதிர்பாராதவிதமாக விக்கெட் கீப்பர் சார்லஸிடம் கேட்ச் ஆனார்.

யுவராஜ் அரைசதம்

இதையடுத்து ஷிகர் தவணுடன் இணைந்தார் யுவராஜ் சிங். கடந்த போட்டிகளில் சரியாக விளையாடாததால் கடும் விமர்சனத்துக்கு உள்ளான யுவராஜ் சிங், மிகவும் கவனமுடன் விளையாடி ரன் சேர்த்தார். மறுமுனையில் வேகமாக ஆடிய தவண், 17-வது ஓவரில் அரைசதம் கடந்தார். அவர் 43 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் அரைசதத்தை எட்டினார். இதன்பிறகு பவுண்டரிகளை பறக்கவிட்ட தவண், இந்தியாவை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்றார். மறுமுனையில் யுவராஜ் சிங் 68 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் அரைசதமடித்தார். 2011-ல் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு யுவராஜ் சிங் அடித்த 2-வது அரைசதம் இது.

தவண் அதிரடி சதம்

அவரைத் தொடர்ந்து டுவைன் பிராவோ வீசிய 30-வது ஓவரில் பவுண்டரி அடித்து சதத்தைப் பூர்த்தி செய்தார் தவண். 73 பந்துகளில் 18 பவுண்டரிகளுடன் அவர் இந்த மைல்கல்லை எட்டினார். இதன்மூலம் ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 5 சதங்கள் அடித்த வீரர்கள் வரிசையில் இலங்கையின் உபுல் தரங்காவுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார் தவண்.

ஆனால் அடுத்த ஓவரில் யுவராஜ் சிங் ஆட்டமிழந்தார். 74 பந்துகளைச் சந்தித்த அவர் 7 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 129 ரன்கள் சேர்த்தது. இதன்பிறகு ஷிகர் தவண் 119 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 95 பந்துகளில் 20 பவுண்டரிகளுடன் இந்த ரன்களை எடுத்தார்.

இதன்பிறகு ரெய்னாவும், கேப்டன் தோனியும் இணைந்து இந்தியாவை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்றனர். எனினும் இந்தியா வெற்றியை நெருங்கிய போது ரெய்னா 34 ரன்களில் (43 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன்) ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜடேஜா களம்புகுந்தார். 47-வது ஓவரின் முதல் பந்தில் தோனி பவுண்டரியை விளாச இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

தோனி 23, ஜடேஜா 2 ரன்களுடன் களத்தில் இருந்தனர். ஷிகர் தவண் ஆட்டநாயகனாகவும், விராட் கோலி தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

தவண் நெகிழ்ச்சி

தற்போது விளையாடியதுபோல வரும் தொடர்களில் சிறப்பாக விளையாடி சதமடிக்க விரும்புவதாக இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவண் தெரிவித்துள்ளார்.

ஆட்டநாயகன் விருதை பெற்ற பிறகு இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “இந்த ஆண்டை மிகச்சிறந்த ஆண்டாக எனக்கு அமைத்துக் கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். இந்த ஆண்டில் நிறைய சதங்கள் அடித்தது மகிழ்ச்சியளிக்கிறது. இது நல்ல பழக்கம். வரும் போட்டிகளிலும் இதேபோன்று விளையாடி சதமடித்து ஏராளமான போட்டிகளில் இந்தியாவுக்கு வெற்றி தேடித்தர விரும்புகிறேன்.

கடந்த சில போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும், பெரிய அளவில் ரன் குவிக்க இயலவில்லை. கடைசிப் போட்டியிலும் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் அது நன்றாக இருந்திருக்காது. இந்த சதம் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. அதனால் தென் ஆப்பிரிக்க தொடரில் சிறப்பாக விளையாட முடியும் என நம்புகிறேன்” என்றார்.

யுவராஜ் ஆதங்கம்

நீண்ட நாள்களுக்குப் பிறகு (11 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு) அரைசதமடித்த யுவராஜ் சிங் கூறுகையில், “சிறப்பாக விளையாடினாலும் பெரிய அளவில் ரன் குவிக்க முடியவில்லை. ஷிகர் தவண் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்ததால் சிறிது நேரம் நிதானமாக களத்தில் நிற்க வேண்டும் என எண்ணினேன். ரெய்னா, விராட், ரோஹித் ஆகியோர் சிறப்பாக விளையாடுவதைப் பார்க்கும் போது நன்றாக இருக்கிறது. ஷிகர் தவண் உள்ளூர் போட்டிகளில் ஏராளமான ரன்களைக் குவித்து சிறந்த வீரராக உருவெடுத்தது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

வழக்கமான ஆடுகளமல்ல: தோனி

வெற்றிக்குப் பிறகு தோனி பேசுகையில், “இதுபோன்ற ஆடுகளங்களில் டாஸ் வென்றுவிட்டால் பீல்டிங்கைத் தேர்வு செய்து எதிரணியைக் கட்டுப்படுத்துவது முக்கியமானது. நாங்கள் சிறப்பாக பந்துவீசியபோதும் சில கேட்சுகளை கோட்டைவிட்டோம். கிரீன் பார்க் வழக்கமான ஆடுகளமாக இல்லை என நினைக்கிறேன்” என்றார்.

ராம்பால் 100 விக்கெட்

இந்தப் போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய மேற்கிந்தியத் தீவுகள் வேகப்பந்து வீச்சாளர் ரவி ராம்பால் 100 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார். அவர் தனது 80-வது போட்டியில் இந்த சாதனையை எட்டியுள்ளார்.

இந்தியா 266 ரன்கள் குவித்து வெற்றி கண்டதன் மூலம் கான்பூர் மைதானத்தில் அதிக ரன்களை சேஸ் செய்த அணி என்ற பெருமையைப் பெற்றது. முன்னதாக 1989-ல் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 256 ரன்கள் குவித்து வெற்றி கண்டதே அதிகபட்ச சேஸிங் சாதனையாக இருந்தது.

இந்த ஆண்டில் மட்டும் ஷிகர் தவண் 6 சதங்களை (ஒரு டெஸ்ட் சதம் உள்பட) அடித்துள்ளார். இதன்மூலம் இந்த ஆண்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனை ஷிகர் தவண் வசமானது.

இந்திய அணியின் வீரர்கள் 22 சதங்களை விளாசியுள்ளனர். இதன்மூலம் ஓர் ஆண்டில் அதிக சதங்கள் அடித்த அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது இந்தியா. முன்னதாக ஆஸ்திரேலிய வீரர்கள் 21 சதங்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x