

தனது குழந்தைகளுடன் நேரம் செலவழித்த இந்திய வீரர்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெர்ட் வீரர் அசார் அலி நன்றி தெரிவித்து தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது.
பாகிஸ்தானுடனான இந்தத் தோல்வி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்தாலும் எதிரியையும் தட்டிக் கொடுக்கும் உணர்வே பரவலாக காணப்பட்டது.
இந்திய வீர்ர்களிடத்திலும் இதே பண்பே எதிரொலித்தது. இந்தியா - பாகிஸ்தான் இரு அணிவீரர்கள் போட்டி முடிந்த பிறகு சகஜமான நிலையில் இரு அணி வீரர்களும் பேசி கொள்ளும் வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் லண்டனில் தனது மகன்களுடன் நேரம் செலவழித்த இந்திய அணி கிரிக்கெட் வீரர்கள் மகேந்திர சிங் தோனி, விராட் கோலி, யுவராஜ் சிங் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அசார் அலி ட்விட்டரில் பதிவு ஒன்றையிட்டுள்ளார்.
அதில், "என் குழந்தைகளுடன் நேரம் செலவிட்ட சிறந்த வீரர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உங்களுடன் நேரம் செலவிட்டதால் எனது குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்” என்று பதிவிட்டுள்ளார்.
இப்பதிவுக்கு கீழ் பிரபல இந்திப் திரைப்பட இயக்குனர் மகேஷ் பட்," மனிதாபிமானம் மீட்கப்பட்டது. இந்த உலகம் உங்கள் கருத்துகளால் மாறாது உங்கள் செயல்களால் மட்டுமே மாறும் என்று பதிவிட்டுள்ளார்"
அசார் அலியின் இப்பதிவுக்கு சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் மற்றும் இந்திய ரசிகர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.