

இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டித் தரவரிசையில் இந்திய வீராங்கனை சாய்னா நெவாலுக்கு 8-வது இடம் கிடைத்துள்ளது.
இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டி வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை டெல்லியில் நடைபெறுகிறது. அதற்கான டிரா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன்படி போட்டித் தரவரிசையில் சாய்னாவுக்கு 8-வது இடம் கிடைத்துள்ளது. சாய்னா தனது முதல் சுற்றில் ஆஸ்திரியாவின் சைமோன் ரட்ஸை சந்திக்கிறார்.
சர்வதேச தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவரும், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனுமான சீனாவின் லீ ஸியூரூய் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். நடப்பு சாம்பியனான தாய்லாந்தின் ரட்சனோக் இந்தனன் போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
சர்வதேச தரவரிசையில் 9-வது இடத்தில் இருப்பவரான இந்தியாவின் பி.வி.சிந்து தனது முதல் சுற்றில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் சீனாவின் ஷிக்ஸியான் வாங்கை சந்திக்கிறார். சிந்து, ஷிக்ஸியானுடன் மோதிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளதால், இந்திய ஓபனில் நம்பிக்கையுடன் ஷிக்ஸியானை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய வீராங்கனைகள் தன்வி லத், ருப்தி முர்குன்டே, பி.சி.துளசி, சாய்லி ரானே, அருந்ததி பாந்தவானே ஆகியோரும் இந்தப் போட்டியில் பங்கேற்கிறார்கள்.
ஆடவர் பிரிவு டிராவைப் பொறுத்தவரையில் நடப்பு சாம்பியனான மலேசியாவின் லீ சாங் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். இந்திய வீரர்கள் காஷ்யப், சௌரப் வர்மா, ஆர்.எம்.வி. குருசாய் தத், சாய் பிரணீத், காந்த், ஆனந்த் பவார், எச்.எஸ். பிரணாய் உள்ளிட்டோர் இந்தப் போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.