

ஊக்க மருந்து விவகாரம் காரணமாக தடகள வீரர் ரஞ்சித் மகேஸ்வரிக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட மாட்டாது என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக விளையாட்டுத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், தடகள வீரர் ரஞ்சித் மல்லேஸ்வரிக்கு 2013 ஆம் ஆண்டுக்கான அர்ஜூனா விருது வழங்கப்படமாட்டாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்வதாக கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி தடகள வீரர்களில் ஒருவரான கேரளத்தைச் சேர்ந்த ரஞ்சித் மகேஸ்வரி (27) டிரிபிள்ஜம்ப் தேசிய சாதனையாளர். இவர், ஒலிம்பிக் மற்றும் உலக தடகள போட்டியில் பங்கேற்றவர்.
இந்த ஆண்டுக்கான அர்ஜூனா விருதுக்கு ரஞ்சித் மகேஸ்வரி தேர்வு செய்யப்பட்டிருந்தார். விருது விழாவுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு தங்களுக்கு இன்று விருது வழங்கபடமாட்டாது. உங்களுக்கு விருது வழங்குவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர்தான் ஊக்க மருந்து விவகாரத்தால் விருது வழங்கப்படவில்லை என்று தெரியவந்தது.
2008–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொச்சியில் நடந்த 48–வது தேசிய ஓபன் தடகள போட்டியில் ரஞ்சித் மகேஸ்வரி ஊக்க மருந்து சோதனையில் சிக்கி அவருக்கு 6 மாத காலம் தடை விதிக்கப்பட்டது. மேல்முறையீட்டால் அந்த தடை 3 மாத குறைக்கப்பட்டது. 2010–ம் ஆண்டில் திருத்தப்பட்ட அர்ஜூனா விருது தகுதி விதியில் ஊக்க மருந்து பயன்படுத்திய வீரர்கள் அர்ஜூனா விருது பெற முடியாது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ரஞ்சித் மகேஸ்வரிக்கு விருது நிறுத்தி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அதேவேளையில், ஊக்க மருந்தில் சிக்கிய வீரரின் பெயரை அர்ஜூனா விருதுக்கு இந்திய தடகள சம்மேளனம் தெரிந்தே எப்படி பரிந்துரை செய்தது என்பது பற்றி இந்திய தடகள சம்மேளன நிர்வாகிகளிடம் கருத்து கேட்டபோது முதலில் யாரும் விளக்கம் அளிக்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.