

ஆடவர் டென்னிஸ் உலகையும் கணக்கில் சேர்த்தால் செரீனாவுக்கு தான் தரவரிசையில் 700-வது இடம்தான் கொடுப்பேன் என்று முன்னாள் டென்னிஸ் நட்சத்திரம் ஜான் மெக்கன்ரோ தெரிவித்தது புதிய சர்ச்சையக் கிளப்பியுள்ளது.
இந்தக் கருத்துக்கு 23 முறை கிராண்ட் ஸ்லாம் ஒற்றையர் சாம்பியன் பட்டம் வென்ற செரீனா வில்லியம்ஸ், பதில் அளிக்கும் போது தன்னை மெக்கன்ரோ மதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஞாயிறன்று தேசிய வானொலி நேர்காணலில் 7 முறை கிராண்ட் ஸ்லாம் வென்ற ஜான் மெக்கன்ரோ கூறும்போது, “மிகச்சிறந்த பெண் டென்னிஸ் வீரர் செரீனா வில்லியம்ஸ் என்பதில் ஐயமில்லை” என்றார்.
ஆனால், அனைத்து கால சிறந்த டென்னிஸ் வீராங்கனை என்று ஏன் செரீனாவை பரிசீலிக்கக் கூடாது என்ற கேள்விக்குப் பதில் அளித்த மெக்கன்ரோ, ஆடவர் டென்னிஸில் அவர் ஆட வேண்டியிருந்தால் அது நிச்சயம் வேறு கதையாகவே இருக்கும். எனவே ஏடிபி-யில் செரீனாவுக்கு நான் தரவரிசையில் 700-வது இடமே கொடுப்பேன், என்று கூறியிருந்தார்.
இதற்கு திங்களன்று செரீனா வில்லியம்ஸ் இரண்டு ட்விட்டர் பதிவுகளில் பதில் கூறியிருந்தார்:
டியர் ஜான் நான் உங்களை ஆராதிக்கிறேன், மதிக்கிறேன், ஆனால் உங்கள் கருத்துகளிலிருந்து என்னை தள்ளி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் கூறுவது தரவுகளின் அடிப்படையில் அல்ல.
அங்கு நான் தரவரிசையில் உள்ள எவருடனும் ஆடியதில்லை. எனக்கு நேரமும் இல்லை. என்னையும் என்னுடைய அந்தரங்கத்தையும் மதிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் நான் ஒரு குழந்தைக்குத் தாயாகப் போகிறேன், குட் டே சார். என்று பதிவிட்டுள்ளார்.