Published : 12 Feb 2014 10:39 AM
Last Updated : 12 Feb 2014 10:39 AM

ஐ.பி.எல் ஏலம்: யுவராஜ் சிங்கை ரூ.14 கோடிக்கு வாங்கியது பெங்களூரு அணி

இந்த ஆண்டு நடக்கவுள்ள ஐ.பி.எல் போட்டியின் 7-ஆம் பதிப்பில் விளையாடவுள்ள வீரர்களுக்கான ஏலம் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.

உணவு இடைவேளைக்குப் பிறகு...

ஆஸ்திரேலியாவின் கேமரூன் ஒயிட் ஏலத்தில் எடுக்கப்படவில்லை. அதே அணியைச் சேர்ந்த நிக் மதீன்சன் ரூ.50 லட்சத்துக்கு பெங்களூர் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

மேற்கிந்திய தீவுகளின் டெரன் பிராவோவை யாரும் வாங்கவில்லை. இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸும் ஏலத்தில் எடுக்கப்படவில்லை. இந்தியாவின் செளரப் திவாரி ரூ.70 லட்சத்துக்கு டெல்லி அணியால் வாங்கப்பட்டார்.

இந்திய அணியின் பத்ரிநாத், இங்கிலாந்தின் இயான் பெல், வங்கதேசத்தின் தமீம் இக்பால், நியூஸிலாந்தின் மார்ட்டின் குப்தில் மேற்கிந்திய தீவுகளீன் லெண்டில் சைமண்ட்ஸ், ஆஸ்திரேலியாவின் டிம் பெயின், இலங்கையின் கவுஷால் சில்வா, மேற்கிந்திய தீவுகளின் ஆண்டிரே ஃப்ளெச்சர், தென் ஆப்பிரிக்காவின் டேன் விலாஸ், ஜிம்பாப்வேயின் பிரேடன் டெய்லர், மேற்கிந்திய தீவுகளின் ஜான்சன் சார்லஸ் ஆகியோரை எந்த அணியும் ஏலம் கேட்கவில்லை.

ஆஸ்திரேலியாவின் பிரெட் லீயை இம்முறை யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. ஆஸ்திரேலியாவின் நாதன் கவுல்டர்-நிலேவை டெல்லி அணி ரூ.4.25 கோடிக்கு ஏலம் எடுத்தது.

தமிழகத்தைச் சேர்ந்த எல். பாலாஜியை ரூ.1.8 கோடிக்கு கோல்கத்தா அணி வாங்கியது. இந்தியாவின் இளம் வீரர் வரூண் ஆரோன் ரூ.1.5 கோடிக்கு பெங்களூர் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டா ர். ஆஷிஸ் நேஹ்ராவை சென்னை அணி ரூ.2 கோடிக்கு வாங்கியது.

பர்வீந்தர் அவானாவை ரூ.65 லட்சத்துக்கு பஞ்சாப் பணி வாங்கியது. ஜெய்தேவ் உனத்காத்தை ரூ.2.80 கோடிக்கு டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது. மோஹித் சர்மாவை சென்னை அணி ரூ.2 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது. முனாப் படேலை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.

தென் ஆப்பிரிக்காவின் இம்ரான் தஹீர், ஆஸ்திரேலியாவின் நாதன் லியோன், இலங்கையின் சூரஜ் ரன்தீவ், இந்தியாவின் ரமேஷ் பவார், ஆஸ்திரேலியாவின் பிராட் ஹாக், இலங்கையின் அகிலா தனஞ்சய, தென் ஆப்பிரிக்காவின் நீல் மெக்கன்சி மற்றும் கிறிஸ் லின், தென் ஆப்பிரிக்காவின் கிப்ஸ் ஆகியோர் ஏலத்தில் எடுக்கப்படவில்லை.

இந்தியாவின் வேணுகோபால் ராவ், ரூ.55 லட்சத்துக்கு ஹைதராபாத் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். மற்றொரு இந்திய வீரர் அபினவ் முகுந்த் ஏலத்தில் எடுக்கப்படவில்லை.

நியூஸிலாந்தின் ஜிம்மி நீஷம், ரூ.1 கோடிக்கு டெல்லி அணியால் வாங்கப்பட்டார். ஆஸ்திரேலியாவின் பென் கட்டிங்கை ரூ.80 லட்சத்துக்கும், கேன் ரிச்சர்ட்சனை ரூ.1 கோடிக்கும் ராஜஸ்தான் அணி வாங்கியது.

பென் ஹில்ஃபெஹ்னாஸை சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.1 கோடிக்கு வாங்கியது.

மேற்கிந்திய தீவுகளின் ஜான்சன் ஹோல்டர் ரூ.75 லட்சத்துக்கு ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்டார். நியூஸிலாந்தின் டிம் செளதியை ராஜஸ்தான் அணி ரூ.1.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹாஸ்லெட்வுட்டை மும்பை அணி ரூ.50 லட்சத்துக்கு வாங்கியது.

உணவு இடைவேளைக்கு முன்பு...

சென்ற வருடம் புனே அணிக்காக விளையாடிய இந்திய வீரர் யுவராஜ் சிங்கை, இம்முறை பெங்களூரு ராயல் சால்ஞ்சர்ஸ் அணி ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

2009-ஆம் ஆண்டிலிருந்து சென்ற வருடம் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வந்த முரளி விஜய்தான் இன்றைய் ஏலத்தில் முதன் முதலில் எடுக்கப்பட்டார். அவர் இம்முறை டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு ரூ.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகளுக்கு, டெல்லி அணி, சென்ற வருடம் விளையாடிய எந்த வீரரையும் தக்கவைத்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அணிக்கான அனைத்து வீரர்களும் இன்றைய ஏலத்திலேயே தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்கள்.

சமீப காலமாக இந்திய அணிக்குத் தேர்வாகாத அதிரடி வீரர் வீரேந்திர சேவாக், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் ரூ.3.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இவர் டெல்லி அணிக்காக ஆடி வந்தார்.

ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரை ஹைதராபாத் அணி ரூ.5.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. மேலும் டேரன் சாமி மற்றும் அமித் மிஷ்ரா இருவரையும், ரைட் டு மேட்ச் அடிப்படையில், முறையே ரூ.3.5 கோடி மற்றும் ரூ.4.75 கோடிக்கு தக்கவைத்துக் கொண்டது.

ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஜான்சனை ரூ.6.5 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது. அதே போல ஆஸ்திரேலியாவின் ஜார்ஜ் பெயிலியும், பஞ்சாப் அணியால் ரூ.3.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

சமீபத்தில் இங்கிலாந்து அணியிலிருந்து ஓய்வுபெற்ற கெவின் பீட்டர்சனை ரைட் டு மேட்ச் முறையில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி ரூ.9 கோடிக்கு ஏலம் எடுத்தது. அதே போல கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் தென் ஆப்பிரிக்காவின் காலிஸை ரைட் டு மேட்ச் முறையில் ரூ.5.5 கோடிக்கு ஏலம் எடுத்தது.

இலங்கையின் நட்சத்திர வீரர் மஹேலா ஜெயவர்த்தனேவை இதுவரை யாரும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. அதே போல நியூஸிலாந்தின் ராஸ் டைலரும் இதுவரை தேர்வாகாமல் உள்ளார்.

இந்திய வீரர் தினேஷ் கார்த்திக், ரூ.12.5 கோடிக்கு, டெல்லி அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி, நியூசிலாந்தின் கேப்டன் மெக்கல்லம்மை ரூ.3.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. அதே போல சென்ற வருடம் சென்னைக்காக விளையாடிய ஃபாஃப் டு பிளெஸிஸ் ரூ.4.75 கோடிக்கு சென்னை அணியால், ரைட் டு மேட்ச் முறையில் தக்கவைத்துக் கொள்ளப்பட்டார்.

இந்த ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி முதன் முதலாக ஆஸ்திரேலிய வீரர் மைக்கல் ஹஸ்ஸியை ரூ.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. சென்ற வருடம் வரை ஹஸ்ஸி சென்னை அணியில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவின் ஆரொன் ஃபின்ச், ரூ.4 கோடிக்கு ஹைதராபாத் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். இந்திய வீரர்கள் சதீஸ்வர் புஜாரா மற்றும் ராபின் உத்தப்பா இருவரும், முறையே பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு ரூ.1.9 கோடிக்கும், ரூ.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

டெல்லி டேர்டெவில்ஸ் அணி, தென் ஆப்பிரிக்க வீரர் டுமினியை ரூ.2.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. மேலும் டெல்லி அணி, மனோஜ் திவாரியை ரூ.2.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

ஆஸ்திரேலிய வீரர் ஹாட்ஜ், ரூ.2.4 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் எடுக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவின் மற்றொரு வீரர் ஷான் மார்ஷ், ரூ.2.2 கோடிக்கு பஞ்சாப் அணியால் தக்கவைத்துக் கொள்ளப்பட்டார்.

சென்ற முறை மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கியக் காரணமாக இருந்த ட்வைன் ஸ்மித், இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடவுள்ளார். அவர் ரூ.4.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

தென் ஆப்பிரிக்க வீரர் குவிண்டன் டி காக் ரூ.3.5 கோடிக்கு டெல்லி அணிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். விருத்தமான் சாஹா ரூ.2.2 கோடிக்கு பஞ்சாப் அணியால் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராயல் சாலஞ்சர்ஸ் அணி, இந்திய வீரர் பார்த்திவ் படேலை ரூ.1.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஆஸ்திரேலியாவின் ஆல் ரவுண்டர் ஸ்டீவ் ஸ்மித்தை ரூ.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இந்தியாவின் யூசுப் பதான் கொல்கத்தா அணியால் ரூ.3.25 கோடிக்கு தக்கவைத்துக் கொள்ளப்பட்டார்.

இலங்கையின் ஆல் ரவுண்டர் திஸாரா பெரேரா ரூ.1.60 கோடிக்கு, பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். சென்னை அணிக்கு ஆடி வந்த ஆல்பி மார்கல், ரூ.2.4 கோடிக்கு பெங்களூரு அணியால் எடுக்கப்பட்டார்.

இந்திய வீரர் இர்பான் பதான், ரூ.2.4 கோடிக்கு சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எடுக்கப்பட்டார். பங்களாதேஷ் அணியின் முன்னணி வீரர் ஷகிப் உல் ஹசன், ரூ.2.8 கோடிக்கு கொல்கத்தா அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க்கை பெங்களூர் அணி ரூ.5 கோடிக்கு எடுத்தது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் அசோக் திந்தாவையும் பெங்களூரு அணியே ரூ.1.5 கோடிக்கு எடுத்தது. மற்றொரு இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, ரூ.2.6 கோடிக்கு ஹைதராபாத் அணியால் எடுக்கப்பட்டார்.

வளந்துவரும் இந்தியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளர்களான புவனேஷ்வர் குமார், முகமது ஷமி இருவரையும் ஏலத்தில் எடுக்க நல்ல போட்டி நிலவியது. புவனேஸ்வர் குமாரை ரூ.4.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், முகமது ஷமியை அதே விலைக்கு டெல்லி அணியும் ஏலத்தில் எடுத்தது.

மேற்கிந்திய தீவுகள் அணியைச் சேர்ந்த ரவி ராம்பால் இன்றைய ஏலத்தில் மிகக் குறைந்த விலையாக ரூ.90 லட்சத்திற்கு, பெங்களூரு அணியால் எடுக்கப்பட்டார். இந்தியாவின் உமேஷ் யாதவ் ரூ.2.6 கோடிக்கு கொல்கத்தா அணியால் எடுக்கப்பட்டார்.

வேகப்பந்து வீச்சாளர்கள் வினய் குமார் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் மோர்னே மார்க்கல் இருவரையும் தலா ரூ.2.8 கோடி கொடுத்து, கொல்கத்தா அணியே ஏலத்தில் எடுத்தது.

இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் பியூஷ் சாவ்லா மற்றும் ப்ரக்யான் ஓஜா இருவரும், முறையே ரூ.4.25 கோடிக்கும், ரூ.3.25 கோடிக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். சாவ்லாவை கொல்கத்தா அணியும், ஓஜாவை மும்பை அணி ரைட் டு மாட்ச் முறையிலும் எடுத்தது.

மற்றொரு இந்திய சுழற்பந்து வீச்சாளரான ராகுல் சர்மா, ரூ.1.9 கோடிக்கு, டெல்லி அணியால எடுக்கப்பட்டார்.

ஆச்சரியமளிக்கும் விதமாக, இலங்கையின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. அவரது ஆரம்ப விலையான ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்ட பெங்களூரு அணிக்கு அவர் எடுக்கப்பட்டார். அதே போல, மற்றொரு இலங்கை சுழற் பந்துவீச்சாளரான அஜந்தா மெண்டிஸ் மற்றும் முன்னாள் இந்திய வீரர் முரளி கார்த்திக் இருவரையும் யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x