ஒருநாள் போட்டி தொடர் ஆஸி. அணிக்கே சாதகம்: இயன் சேப்பல்

ஒருநாள் போட்டி தொடர் ஆஸி. அணிக்கே சாதகம்: இயன் சேப்பல்
Updated on
2 min read

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடர் ஆஸ்திரேலிய அணிக்கே சாதகமாக இருக்கும் என அந்நாட்டின் முன்னாள் வீரர் இயன் சேப்பல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தி டெய்லி டெலிகிராப் நாளிதழில் கூறியிருப்பதாவது:

ஆஸ்திரேலியாவில் ஒரு மந்தமான டெஸ்ட் தொடர் முடிவடைந்து ரசிகர்கள் ஒரு அர்த்த முள்ள தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையை கைப்பற்றிய ஒரு அணிக்கும், 2015-ம் உலகக்கோப்பை வென்ற ஒரு அணிக்கும் இடையிலான போட்டி நடக்கப்போகிறது. ஆஸ்திரேலியா மற்றும் ஸ்டீவ் ஸ்மித்துக்கு உண்மையான சோதனையை தோனி வழங்க இருக்கிறார். ஆஸ்திரேலியாவிற்கு நெருக்கடி கொடுக்க, இந்திய அணியில் தலைசிறந்த வீரர்கள் மற்றும் திறமையானவர்கள் உள்ளனர். ஆனால் அவர்களால் ஆஸ்திரேலியாவை அவர்களின் சொந்த மண்ணில் வீழ்த்த முடியும் என்று கூறிவிட முடியாது.

இந்த தொடரால் இரு அணிகளும் இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை டி20 தொடருக்காக தங்களை வலிமையாக்கிக்கொள்ளும். ஆஸி. அணிக்கு முதல் இரண்டு போட்டிகளும் சாதகமாக இருக்கும்.

இந்திய அணியின் பேட்டிங் வரிசை வலுவானதாக இருந்தாலும் ஒரு ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன் குறைவாக உள்ளார். அதேவேளையில் ஆஸ்திரேலிய அணியில் டாப் ஆடரில் நல்ல தொடக்கம் கொடுக்கும் வார்னர், ஆரோன் பின்ஞ்ச் உள்ளனர். அவர்களை தொடர்ந்து மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெல், மேத்யூ வேட், பால்க்னர் ஆகியோரும் விரைவு ரன் குவிப்பில் திறன் படைத்தவர்கள். இந்திய அணியில் ஆல்ரவுண்டர்கள் இல்லாதது மிகப்பெரிய பின்னடைவு. மேலும் டாப் ஆர்டரில் 4 வீரர்கள் சிறப்பாக விளையாடாவிட்டால் சரிவை சந்திப்பதும் வழக்கமாக உள்ளது. இதுவே அணியின் பலவீனமாகவும் இருக்கிறது.

திறமையாகவும், ஆக்ரோஷத் துடன் விளையாடக்கூடிய வீரர்களை இந்திய அணி டாப் ஆர்டரில் கொண்டுள்ளது. ஆனால் விரைவிலேயே விக்கெட்டுகள் சரிந்துவிட்டால் இவர்கள் எச்சரிக்கையுடன் விளையாட தொடங்கிவிடுகின்றனர்.

2011-2012 டெஸ்ட் தொடரில் வாகாவில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய பந்து வீச்சை வெளுத்து வாங்கி வார்னர் 180 ரன்கள் குவித்தார். அப்போது இந்திய அணியில் இடம் பெற்றிருந்த பந்து வீச்சாளர்கள் தற்போதும் உள்ளனர். உலககோப்பை அரையிறுதியில் ஆரோன் பின்ஞ்ச், ஸ்மித் ஆகியோர் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்தனர்.

வார்னர், ஆரோன் பிஞ்ச் ஆகிய இவரும் வேகப்பந்து வீச்சை அடித்து ஆடி ரன் சேர்க்கும் திறன் கொண்டவர்கள். இது நடைபெற்றால் வாகா, காபா மைதானங்களில் இந்திய அணி மாற்று வழியாக தங்களுக்கே உரித்தான சுழற்பந்து வீச்சை தான் கையாள முற்சிக்கும்.

ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டு எதிரணியை தாக்கும் திட்டத்தையே விரும்பும். உள்ளூரில் ஜெயிப்பதற்கான திட்டங்களை ஆஸி. நன்கு தெரிந்து வைத்திருக்கும். ஸ்மித் ஒரு வெற்றிகரமான டெஸ்ட் கேப்டன் என்பதை நிரூபித்துள்ளார்.

தோனி யாரையும் குறைசொல்லாத வீரர். ஒருநாள் போட்டி மற்றும் டி 20ல் அவர் உலககோப்பையை வென்று கொடுத்துள்ளார். அடுத்த டி 20 உலககோப்பை இந்தியாவில் நடைபெற உள்ளதால் தனது அணியின் வாய்ப்புகள் குறித்து அறிய அனைத்து உரிமைகளும் தோனிக்கு உள்ளது.

இவ்வாறு இயன் சேப்பல் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in