

ஜெர்மனி கால்பந்து அணியின் கேப்டன் பாஸ்டியன் ஸ்வெயின்ஸ்டெய்கர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
நடுகள வீரரான இவர் தலைமையில் கடந்த 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரை ஜெர்மனி வென்றது. இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி அரையிறுதியில் பிரான்ஸிடம் 0-2 என்ற கோல்கணக்கில் தோல்வியடைந்தது.
இந்நிலையில் ஜெர்மனி அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் கேப்டன் பாஸ்டியன் ஸ்வெயின்ஸ்டெய்கர் தெரிவித்துள்ளார். 31 வயதாகும் பாஸ்டியன் ஸ்வெயின்ஸ்டெய்கர் ஜெர்மனி அணிக்காக 120 போட்டிகளில் விளையாடி 20 கோல்கள் அடித்துள்ளார். தற்போது மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடி வருகிறார்.
ஸ்வெயின்ஸ்டெய்கர் மேலும் கூறும்போது, " 2018 உலகக் கோப்பை தகுதி சுற்று ஆட்டத்தில் செப்டம்பர் 9-ம் தேதி நார்வே அணியுடன் ஜெர்மனி மோதுகிறது. அதன் பிறகு அடுத்த 4 நாட்களில் சொந்த நாட்டில் நட்புரீதியிலான போட்டியில் பின்லாந்துடனும் ஜெர்மனி மோத உள்ளது. எனவே இதுதான் நான் ஓய்வு பெற சரியான நேரம். அணியின் நீண்ட கால திட்டத்துக்கு என்னை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று நான் ஏற்கெனவே பயிற்சியாளருக்கு தகவல் தெரிவித்து விட்டேன். 2014 உலகக் கோப்பையை வென்றது போன்ற ஒரு ஒரு மகத்தான தருணம் எனக்கு மறுபடியும் அமையவில்லை. உலகக் கோப்பை தகுதி சுற்றில் ஜெர்மனி சிறப்பாக செயல்பட வாழ்த்துகிறேன். ரசிகர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் பிரதிநிதியாக நான் விளையாடிதில் பெருமை அடைகிறேன்" என்றார்.
ஸ்வெயின்ஸ்டெய்கர் கடந்த 12-ம் தேதி செர்பியாவைச் சேர்ந்த 28 வயதான டென்னிஸ் வீராங்கனையான அனா இவானோவிச்சை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.