

டெல்லியில் நடைபெற்று வரும் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்ததற்கு தார்மீக பொறுப்பேற்பதாக ஹாக்கி இந்தியா (எச்.ஐ.) அமைப்பின் பொதுச் செயலர் நரீந்தர் பத்ரா கூறியுள்ளார்.
டெல்லியில் செவ்வாய்க் கிழமை இரவு நடைபெற்ற இந்தியா மற்றும் கொரியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதனால் அடுத்த சுற்றான காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இந்தியா இழந்தது. இந்த நிலையில் பத்ரா மேலும் கூறியிருப்பதாவது:
ஜூனியர் உலகக் கோப்பையில் இந்திய அணியின் செயல்பாடு சரியாக அமையாததற்கும் இந்திய அணி காலிறுதிக்கு முன்னேற முடியாமல் போனதற்காகவும் நான் தனிப்பட்ட முறையில் முழு பொறுப்பேற்கிறேன். இந்தத் தோல்விக்காக தயவுகூர்ந்து அணியின் மீதோ, பயிற்சியாளர்கள் மீதோ, உயர் செயல்பாடு குழுவின் மீதோ எவ்வித குற்றச்சாட்டையும் சுமத்த வேண்டாம்.
ஹாக்கி இந்தியாவின் அனைத்து செயல்பாடுகளுக்கும் தலைமை வகிக்கும் நான் இந்தத் தோல்விக்கு பொறுப்பேற்கிறேன். ஏமாற்றமளிக்கும் வகையில் இந்திய அணி விளையாடியதற்காக நாட்டிடமும், இங்குள்ள ஹாக்கி ஆர்வலர்களிடமும், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகத்திடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வியாழக்கிழமை நடைபெறும் 9 முதல் 12 வரையிலான இடங்களுக்கான ஆட்டத்தில் ஆர்ஜென்டீனாவை சந்திக்கிறது இந்தியா.