

ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி லீக் ஆட்டத்தில் இந்திய அணி கடைசி 3 விநாடிகளில் வெற்றியை கோட்டை விட்டது. துப்பாக்கிச் சுடுதலில் பதக்கம் வெல்வார் என கருதப்பட்ட அபிநவ் பிந்த்ரா ஏமாற்றம் அளித்தார். 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் அவரால் 4-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.
ஆடவர் ஹாக்கியில் இந்திய அணி முதல் ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்திய நிலையில் 2-வது ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஜெர்மனியுடன் நேற்று மோதியது. 17-வது நிமிடத்தில் ஜெர்மனி முதல் கோலை அடித்தது. அந்த அணியின் நிக்கலஸ் வெல்லன் இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷின் தடுப்பை உடைத்து கோல் அடித்து அசத்தினார்.
அடுத்த 5-வது நிமிடத்தில் இந்தியா பதிலடி கொடுத்தது. பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ருபிந்தர் பால் கோல் அடிக்க முதல் பாதி ஆட்டம் 1-1 என சமநிலை பெற்றது. இரண்டாவது பாதியில் இரு அணிகளுக்கும் கோல் அடிக்க சில வாய்ப்புகள் கிடைத்தது.
ஆனால் கோல் கீப்பர்களின் சாமத் தியர்த்தால் அவை முறியடிக்கப்பட்டன. ஆட்டம் முடிவடைய 3 விநாடிகளே இருந்த நிலையில் ஜெர்மனி 2-வது கோலை அடித்தது. அந்த அணியின் கிறிஸ்டோபர் அடித்த இந்த கோல் வெற்றி கோலாகவும் அமைந்தது. முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி வெற்றி பெற்றது.
அபிநவ் பிந்த்ரா
ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு இறுதிப்போட்டியில் இத்தாலி வீரர் தங்கப் பதக்கம் வென்றார். இந்தியாவின் அபினவ் பிந்த்ரா 4-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தார்.
இத்தாலியின் கேப்ரியானி 206.1 புள்ளியுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.
உக்கரைனின் ஷெர்ஹி 204.6 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தையும், ரஷ்யாவின் மஸ்லெனிகோவ் 184.2 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினார். பிந்த்ரா 163.8 புள்ளிகள் பெற்றார். மற்றொரு இந்திய வீரர் ககன்நரங் தகுதி சுற்றோடு வெளியேறினார்.