Published : 11 Oct 2014 03:18 PM
Last Updated : 11 Oct 2014 03:18 PM

3-ஆம் பேட்டிங் நிலையை இழந்த கோலி; தனது ஃபார்ம் சரிவு பற்றி கூறுவது என்ன?

தொடர்ந்து சரியாக ஆட முடியாமல் தத்தளித்து வரும் விராட் கோலி, 2-வது ஒரு நாள் போட்டியில் அவர் வழக்கமாகக் களமிறங்கும் 3-ஆம் நிலையில் களமிறங்கவில்லை.

அவருக்குப் பதிலாக அம்பாத்தி ராயுடு களமிறக்கப்பட்டுள்ளார். இன்றைய ஆட்டம் தொடங்கும் முன் தனது ஃபார்ம் சரிவு பற்றி அவர் கூறும்போது, “கடந்த போட்டி முடிந்தவுடன் எம்.எஸ்.தோனி குறிப்பிட்டது போல் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் தங்கள் கிரிக்கெட் வாழ்க்கையில் இந்தக் கட்டத்தை கடந்து சென்றுதான் ஆகவேண்டும்.

எனது கிரிக்கெட் வாழ்வின் இக்காலக்கட்டத்தை நான் மதிக்க வேண்டும். கடவுள் அன்பானவர். கடந்த 4 அல்லது 5 ஆண்டுகளாக ஓரளவுக்கு சிறப்பாகவே விளையாடினேன் என்று நினைக்கிறேன், நான் அதையும் மதிக்க வேண்டும்.

தீவிரமாக வலைப் பயிற்சி செய்துவருகிறேன். ஒரேயொரு பெரிய இன்னிங்ஸிற்காகக் காத்திருக்கிறேன்.

உத்தியில் என்ன கோளாறு என்று மண்டையைப் போட்டுக் குழப்பிக்கொள்வது சுலபம். எனக்குத் தன்னம்பிக்கை அதிகம். பிரச்சினை என்ன என்பதை என் கண்முன்னே கொண்டுவந்து தீர்வு காண்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.

முதலில் மனதளவில் அதனை சரி செய்துவிட்டால் உத்தி தானாக வந்து நிற்கும். கடந்த போட்டிகளில் ரன் எடுக்க முடிந்தபோது, இப்போது ஏன் மீண்டும் நான் ரன் குவிக்க முடியாது?

என்னுடைய பலவீனம் என்ன என்பதை எதிரணியினர் அறுதியிடுவதற்கு அவர்களுக்கு 5 ஆண்டுகாலம் தேவைப்படாது. இப்போது நான் அவுட் ஆகும் இடங்களில் முன்பெல்லாம் பந்து வீசப்பட்டுள்ளது, நான் அவற்றை பவுண்டரிகளுக்கு விரட்டியுள்ளேன்.

நான் ஏற்கெனவே கூறியது போல் இந்தக் காலக்கட்டத்தை மதிக்க வேண்டும்” இவ்வாறு கூறியுள்ளார்.

எல்லா வீரர்களுக்கும் இதே போன்ற பார்ம் சரிவு காலக்கட்டம் உண்டு. ஆனால் எந்த வீரரும் ஒரே முறையில் தொடர்ந்து ஆட்டமிழக்கவில்லை என்பதைக் கூற முடியும். இதுதான் கோலியின் பார்ம் சரிவில் கவலையளிக்கக் கூடியது என்று ஏற்கெனவே இயன் சாப்பல் தெரிவித்திருந்ததை இங்கு நினைவுகூர்வது நலம்.

சுனில் கவாஸ்கரும் கொச்சி ஒருநாள் போட்டிக்குப் பிறகு கூறும்போது, கோலியை புதிய பந்துக்கு எதிராக களமிறக்க வேண்டாம் என்று ஆலோசனை வழங்கியிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x